புதுடில்லி :“இந்தியாவின் பொறுமையை யாரும் சோதிக்கக்கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு நேர, இந்திய ராணுவம் ஒருபோதும் அணுமதிக்காது,” என, ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று எச்சரிக்கை விடுத்தார்.கடந்த, 1949ம் ஆண்டு ஜனவரி, 15ம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தலைமை தளபதியாக, ஜெனரல், கே.எம்.கரியப்பா பதவி ஏற்றார்.
அணிவகுப்பு மரியாதை
அதை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தலைநகர் டில்லியில் நேற்று நடந்த ராணுவ தின கொண்டாட்டத்தில், ராணுவ தலைமை தளபதி, எம்.எம். நரவானே பங்கேற்றார். அவருக்கு, ராணுவ வீரர்கள், அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.விழாவில், நரவானே பேசியதாவது:பிராந்திய பிரச்னைகளுக்கு, பேச்சு வாயிலாக தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. எனினும், இதை வைத்து, இந்தியாவின் பொறுமையை யாரும் சோதிக்கக்கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு நேர, இந்திய ராணுவம் ஒருபோதும் அணுமதிக்காது.எல்லையில், ஒருதலைபட்ச மாற்றங்களை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களுக்கு, சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், நம் வீரர்களின் உயிர் தியாகம் என்றும் வீண் ஆகாது.
அச்சுறுத்தல்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க, ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, எட்டு கட்ட பேச்சுகள் இதுவரை நடந்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள், பரஸ்பர மற்றும் இருதரப்பு பாதுகாப்பு அடிப்படையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.மற்றோரு அண்டை நாடு, பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதனால், எல்லைப் பகுதி யில் ஏற்படும் அச்சுறுத்தல்களை, நாம் சரியான முறையில் முறியடித்து வருகிறோம். சர்வதேச எல்லைப் பகுதி வாயிலாக, இந்தியாவுக்குள் ஊடுருவ, 400 பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர். பாக்., ராணுவத்தினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி, ஆயுதங்களை கடத்தவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.
அணிவகுப்பில் 'ட்ரோன்'கள்
டில்லியில் நேற்று நடந்த ராணுவ தின கொண்டாட்டத்தில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு குறித்து, செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இலக்கை குறிவைத்து தகர்ப்பது; முதலுதவி உபகரணங்களை வினியோகிப்பது போன்ற ஒத்திகைகளில், அவை ஈடுபடுத்தப்பட்டன. ராணுவ தின அணிவகுப்பில், ஆளில்லா விமானங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது, இதுவே முதன்முறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE