சென்னை : ''மக்களுக்கான திட்டங்கள் வாயிலாக, நாட்டின் பிற மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றதை போல, தமிழகத்திலும் பா.ஜ., வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
'துக்ளக்' வார இதழின், 51வது ஆண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில், பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா பேசியதாவது:நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியில், பிரதமர் மோடி ஈடுபட்டு உள்ளார். இதற்காக, 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், 40 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
இதில், 20 கோடி பெண்களின் வங்கி கணக்கில், 1,500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மருத்துவ காப்பீடு
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், 10 கோடியே, 75 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. நாடு முழுவதும், 50 சதவீத மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.எட்டு கோடி இலவச காஸ் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 32 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.கொரோனா பரவலை தடுக்க, சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்து, கோடிக்கணக்கானவர்களின் உயிரை, பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதர வாக, வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். நாடு, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே, பிரதமர் மோடி பணியாற்றுகிறார். மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்ததால், மக்கள் ஆதரவில், பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது.
தாமரை மலரும்
அதேபோன்ற வெற்றியை, தமிழகத்திலும் பெற வேண்டும் என்பது தான், எங்கள் எண்ணம். அது, உங்களின் ஆதரவுடன் நிறைவேறும் என, எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தில் முதன்மையான கட்சியாக, பா.ஜ., வளர, எங்கள் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். நிச்சயம், தமிழகத்தில் தாமரை மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:
மக்களை ஈர்க்கும் சக்தி, அ.தி.மு.க., - - தி.மு.க., கட்சிகளுக்கு இல்லை. காங்கிரஸ் தற்போது, பாதி தி.மு.க.,வாக மாறி விட்டது. அடுத்த ஐந்து, ஆறு ஆண்டுகளில், தமிழகத்தில் பா.ஜ., வளர அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்திற்கு, பா.ஜ., தேவை. தி.மு.க.,வை எதிர்க்க, ஓரணியில் திரள வேண்டும். அந்த அணிக்குள், சசிகலா உட்பட, யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். தமிழகத்தில் ஹிந்து ஓட்டு வங்கி உருவாகி வருகிறது. லஞ்சத்தில் ஈடுபடுவோருக்கு, உச்ச நீதிமன்றம் கருணை காட்டும் போது, நாட்டில் எப்படி ஊழல் ஒழியும்.தி.மு.க.,வில் அராஜகம், ரவுடித்தனத்திற்கு அளவே இல்லை. அ.தி.மு.க.,வில், அது குறைவாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
துக்ளக் ஆண்டு விழாவிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வீடியோ' வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும், 'துக்ளக் டிஜிட்டல் டாட்காம்' மற்றும் சோ எழுதிய புத்தகத்தையும் நட்டா வெளியிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE