வாஷிங்டன்: வரும் ஜன., 20ம் தேதி அமெரிக்காவின் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை அதிபராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் தன்னுடைய பாரம்பரிய உடையான புடவையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரம்பின் கொரோனா குறித்த அச்சமின்மை மற்றும் அமெரிக்க பார்லி வளாகத்தில் நடந்த வன்முறை ஆகிய நிகழ்வுகளுக்கு பின் வரும் ஜன.,20ம் தேதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.
கமலா ஹாரிஸ் கருப்பின மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் துணை அதிபராக பதவியேற்க உள்ளார். இவர் பதவியேற்பின் போது புடவையில் தோன்றுவது ஆசிய அமெரிக்கர்களிடையே தற்போதைய கொந்தளிப்பான சூழலில் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆற்றிய உரையில் வெள்ளை நிற டைட் பேன்ட் சர்டில் கமலா தோன்றினார். பெண்களுக்கான ஓட்டுரிமை இயக்கத்திற்கு அவருடைய தோற்றம் மற்றும் பேச்சு வழிவகுத்தது.

கடந்த 2019ம் ஆண்டில் கமலா ஹாரிஸிடம், ஆசிய அமெரிக்க சமூகத்தினர், ‛ தாங்கள் அதிபராக பதவியேற்றால் இந்திய பாரம்பரிய உடையான புடவை அணவீர்களா என்று கேட்டதற்கு, ஹாரிஸ், ‛ அதிபரானால் பார்த்துக் கொள்ளலாம்' என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய கலாச்சார அடையாளமாக 6 கஜ புடவை விளங்குகிறது. புடவையில் கமலா ஹாரிஸ் தோன்றும் பட்சத்தில் பிடென் மற்றும் ஹாரிஸின் கூட்டு நிர்வாகம் அங்குள்ள சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் என்பதற்கு சிறந்த அடையாளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அந்நாட்டின் ஆடை வடிவமைப்பாளர் பிபு மொஹாபத்ரா கூறியதாவது, ‛ பாரம்பரிய உடையின் பெருமையை உணர்ந்துள்ள கமலா ஹாரிஸ் பதவியேற்பின் போது வாரணாசி பட்டுப் புடவையில் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை'
‛கமலா ஹாரிஸ் தன் தாத்தா பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தில் அவர் புடவை அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்டு வந்தது. கமலா வலிமை மிக்க பெண்ணாகவும், துடிப்பு மிக்கவராகவும் விளங்கி வருகிறார். அவருடைய சாதனைகள் மற்றும் பங்களிப்பு குறித்து எனக்கு நன்றாக தெரியும். அவரை எங்கள் குடும்பத்தின் அங்கத்தினராக உணர்கிறேன்'
அமெரிக்கர்களிடையே அவருடைய புடவை தோற்றம் ஆச்சிரியத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். ஏனென்றால் இதுவரை அமெரிக்கர்கள் புடவையில் துணை அதிபர் யாரையும் பார்த்ததில்லை. இருப்பினும் இதை நாட்டினை ஒன்றிணைக்க கருவியாக ஹாரிஸ் பயன்படுத்துவார், 'இவ்வாறு பிபு மொஹாபத்ரா கூறினார்.
கடந்த 2019ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அவரது ஆடை வடிவமைப்பளாராக இருந்த பிரபால் குருங் கூறியதாவது, ‛ கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் சிறுபான்மையினர் நாட்டின் மிகப் பெரிய பதவிக்கு வர முடியும் என்று நிரூபித்துள்ளார்.' இவ்வாறு அவர் கூறினார்

இது தவிர முன்னாள் அதிபர் ஒபாமாவின் துணைவியார் மைக்கேல் ஒபாமாவிற்கு ஆடை டிசைனராக 28 முறை பணியாற்றிய நயீம் கான் கூறியதாவது,‛ கமலா ஹாரிஸ் பாரம்பரிய உடையான புடவையை அமெரிக்காவை ஒன்றிணைக்கும் தன்னுடைய ராஜதந்திரமாக பயன்படுத்துவார். இவர் அமெரிக்காவின் துணை அதிபராக வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவை முற்றிலும் வித்தியாசமாக பார்க்க போகின்றன. இது அமெரிக்காவின் பன்முகத் தன்மையை காட்டுகிறது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நம் நாட்டின் பாரம்பரிய விஷயங்களை கையாள்வதில் ஹாரிஸ் கவனமாக உள்ளார். இருப்பினும் வரும் ஜன.,20ல் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் புடவையில் தோன்றினால் அமெரிக்கர்கள் உட்பட உலகில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதை மறுக்க முடியாது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE