தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்; பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்; பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி, ஜன. 16-நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதையொட்டி, தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகள் தயாரிப்பில், உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
vaccine, PM Modi, Covid19, Corona Virus

புதுடில்லி, ஜன. 16-நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதையொட்டி, தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகள் தயாரிப்பில், உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிரா மாநில புனேயை சேர்ந்த, 'சீரம்' இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது.

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' எனப்படும் தடுப்பூசியை, உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அவசரகாலத்திற்கு பயன்படுத்த, மத்திய அரசு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்குகிறது.

உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைக்கிறார்.தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள 'கோ - வின்' மொபைல் செயலியையும், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.


latest tamil newsமுதல்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு, இந்த தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக போடுகிறது.அதன் பின், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு உட்பட்ட, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின், ஒரு, 'டோஸ்'க்கான செலவு, 200 லிருந்து, 295 ரூபாய் வரை ஆகிறது.தற்போது, 1.65 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி போட வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பு மருந்து கொடுத்து, 14 நாட்களுக்கு பின் தான், இரண்டாவது டோஸ் கொடுக்க வேண்டும்.முதல் டோசில் எந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே மருந்தை தான், இரண்டாவது டோசிலும் கொடுக்க வேண்டும்; மாற்றிக் கொடுக்கக் கூடாது.உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடக் கூடாது.

முதல் டோஸ் போடப்பட்டபின், ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அவருக்கு இரண்டாவது டோஸ் வழங்க கூடாது. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல் நலம் குன்றி, மருத்துவமனைகளில் இருப்பவர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடக்கூடாது.

முதல் நாளில், 2,934 மையங்களில், மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்வோர், அந்தந்த மையங்களில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும், நாள் ஒன்றுக்கு, 100 பேருக்கு மேல் தடுப்பூசி போடக் கூடாது இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் இன்று பேச்சு!


கொரோனா தடுப்பூசி போடும் பணி, இன்று துவங்கப்பட உள்ளதை அடுத்து, நாட்டு மக்ளிடம், 'டிவி' வழியாக, பிரதமர் மோடி, இன்று உரையாற்றுகிறார். இது குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டு மக்களிடம், பிரதமர் இன்று காலை பேசுகிறார். தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகள் பற்றி, மக்களிடம் பிரதமர் தெரிவிப்பார்.மேலும், 'தடுப்பூசிகள் குறித்து, வதந்திகளை சில சக்திகள் பரப்பும்; அவற்றை நம்ப வேண்டாம்' என, மக்களிடம் பிரதமர் கேட்டுக் கொள்வார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X