கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு இருப்பதால், தன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இன்று அறிவிக்கஉள்ளதாக, அக்கட்சியின் எம்.பி., சதாப்தி ராய் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. மம்தா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என, பா.ஜ., சூளுரைத்துள்ளது.
இந்நிலையில், ஆளும் திரிணமுல் காங்.,கை சேர்ந்த, பல மூத்த தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். மம்தா அமைச்சரவையில், அமைச்சராக பதவி வகித்து வந்தவரும், திரிணமுல் காங்., மூத்த தலைவருமான, சுவேந்து அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார்.இவருடன், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி., உட்பட, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, 35 தலைவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர்.
இந்நிலையில், திரிணமுல் காங்.,கை சேர்ந்த, பிர்பும் லோக்சபா தொகுதி எம்.பி.,யும், முன்னாள் நடிகையுமான சதாப்தி ராய் கூறியுள்ளதாவது:பிர்பும் தொகுதியில், மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் மீது, மக்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அவர்களுக்காக பணியாற்ற முடியாத நிலை ஏற்படும்போது, அப்பதவியில் தொடர்வதில் அர்த்தமில்லை. இது குறித்து, கட்சி தலைமையிடம் தெரிவிக்க பலமுறை முயன்றேன். பலன் இல்லை. எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இன்று மதியம் அறிவிப்பு வெளியிடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

சதாப்தி ராய்க்கும், பிர்பும் மாவட்ட திரிணமுல் காங்., தலைவர் அனுப்ரதா மெண்டாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டில்லி சென்றுள்ள சதாப்தி ராய், பா.ஜ.,வில் இணைய கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சதாப்தி ராய் மட்டுமல்லாமல், திரிணமுல் காங்., மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ரஜிப் பானர்ஜியும், கட்சி தலைமையுடன் அதிருப்தியில் உள்ளார். இவரும், தன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று மதியம் அறிவிப்பேன் என, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE