புதுடில்லி: உழவர் அறப்போராட்டத்தில் உள்ள ஒண்மையை பா.ஜ., அரசு புரிந்து கொள்ளுமா என காங்., எம்.பி., சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
தை மாதம் 2ம் நாளான நேற்று (ஜன.,15) திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில், திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில், தமிழில் டுவிட் செய்தார். அதில், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், திருவள்ளூவரின் லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: திருவள்ளுவரை இன்று நினைவில் கொண்ட பாஜக தலைவர்களுக்கு ஒரு குறளைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு”
50 நாட்களாகக் கடும் குளிரில் நடைபெறும் உழவர் அறப்போராட்டத்தில் உள்ள ஒண்மையை பா.ஜ., அரசு புரிந்து கொள்ளுமா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE