மதுரை: தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மெடிக்கல் கவுன்சில் தேசிய தலைவர் ஜெயலால், ஐ.எம்.ஏ மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மதுரை அரசு மருத்துமவனை டீன் சங்குமணி, துப்புரவு பணியாளர் முத்துமாரி உட்பட 100 மருத்துவப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது. திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:குறுகிய காலத்தில் பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
முதல் தடுப்பூசி டோஸ் போட்ட 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் போட வேண்டும். அடுத்து 14 நாட்கள் என மொத்தமாக 42 நாட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 226 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை முகாம் அமைக்கப்பட்டு தற்போது 166 இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இதை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கிறோம்.அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்காக தடுப்பூசி போடுவோம். முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு அங்கீகரித்துள்ள வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை பெற்றுள்ளோம்.

தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு, 20ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் பெற்றுள்ளோம். தடுப்பூசியால் பாதிப்பு வருமோ என்று பொதுமக்களுக்கு பயம் ஏற்படலாம். இப்பயத்தை போக்கும் வகையில் டாக்டர்கள் சங்க தேசிய, மாநில தலைவர்களுக்கு இங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நம்மை காத்த டாக்டர்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதால், மக்கள் மனதில் நம்பிக்கை தொடர்ச்சி 5ம் பக்கம்தடுப்பூசி போட்டவர்கள் கூறியதாவது:தடுப்பூசி போடுவது எங்களுக்கு அவசியம்:டாக்டர் செந்தில்அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர்கொரோனா மருத்துவ சிகிச்சையாளர் என்ற முறையில் 10 மாத காலமாக 10ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளேன்.
நிறைய இறப்புகள், வேதனைகளை பார்த்துள்ளேன். இரண்டாவது அலை வந்துவிடக்கூடாது என்ற பயத்துடன் இருந்தோம். இவ்வளவு விரைவில் தடுப்பூசி வந்தது சந்தோஷமாக உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சின்ன ஊசி தான். வலியும் இருக்காது. வேறு எந்த அறிகுறியும் இல்லை. 2வது டோஸ் அடுத்து போடுவோம். இதன் முக்கியத்துவம் தெரியும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஒரே ஒரு ஊசி தான் என்ற நிலைமை இல்லை.
இப்போது பல தடுப்பூசிகள் உள்ளதால் தான் தேவையற்ற வதந்திகள் வருகின்றன. ஒரு வருஷம் கழித்து இந்த தடுப்பூசி வந்தால் கூட, அதை போட்டுக் கொண்ட லட்சத்தில் ஒருவருக்கு வேதனை, காய்ச்சல் போன்ற பக்கவிளைவு இருக்கும். இதற்கு பயப்படுவது தவறு. நான் கோவிஷீல்டு ஊசி போட்டுக்கொண்டேன். கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரச்னையில்லை. மருத்துவப் பரிசோதனைக்கு பின் தடுப்பூசிமுத்துமாரிதுப்புரவு பணியாளர், மதுரை அரசு மருத்துவமனை ஏழாண்டுகளாக இங்கு ஒப்பந்த பணியாளராக வேலைபார்க்கிறேன்.
கொரோனா வார்டில் தான் வேலைபார்த்தேன். ஆனாலும் நான் பாதிக்கப்படவில்லை. மதுரையில் தான் முதல் தடுப்பூசி போடுகிறார்கள் என்பதால் எனது பெயரை சந்தோஷமாக பதிவு செய்தேன். என் மூலம் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கலாம் என்பதால் ஊசி போட்டுக் கொண்டேன்.தடுப்பூசி போடுவதற்கு முன்பாக கொரோனா சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி பரிசோதனை செய்யப்பட்டு வேறு நோய் தாக்கமுள்ளதா என கேட்டறிந்தனர். ஊசி போட்ட பின் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. சாதாரணமாக உள்ளேன். ஊசி போட்ட வலி கூட இப்போது இல்லை. வழக்கம் போல வேலைகளை செய்யலாம் என்றும் டாக்டர்கள் கூறினர்.
முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம்
தமிழகத்தில் சுகாதாரத் துறையில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 869 பேர், காவல் துறையில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 240, உள்ளாட்சி துறையில் 79ஆயிரத்து 820 பேர் என மொத்தமாக 6 லட்சத்து 83 ஆயிரத்து 929 பேர் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். 2704 குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள் மூலம் 5,36,500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் பாதுகாக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 50 சதவீத தடுப்பூசிகள் போடப்பட்டு, 28 நாட்கள் கழித்து மீதியுள்ள தடுப்பூசிகள் போடப்படும்.
இதன் மூலம் தட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து கிடைப்பதற்கான கால இடைவெளி கிடைக்கும். முன்களப் பணியாளர்களை தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். விருப்பத்தின் அடிப்படையில் தான் ஊசி போடப்படுகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம். ராதாகிருஷ்ணன், சுகாதார செயலாளர்
மண்டல வாரியாக தடுப்பூசி பட்டியல்:தமிழகத்தில் மண்டல அளவில் 10 மையங்கள் அமைக்கப்பட்டு 5 லட்சத்து 36ஆயிரத்து 500 தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. 24 ஆயிரத்து 300 டோஸ்கள் மட்டும் கையிருப்பில் வைக்கப்பட்டு மற்றவை முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.சென்னை மண்டலம்:359 குளிர்பதன கிட்டங்கிகள் மூலம் சென்னை மாநகராட்சி, பூந்தமல்லி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு 1,18,000 தடுப்பூசிகள். கடலுார் மண்டலம்:கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்கு 25,500.திருச்சி மண்டலம்:திருச்சி, அரியலுார், பெரம்பலுார், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கரூருக்கு 40,200.
தஞ்சை மண்டலம்: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்து 28,600.மதுரை மண்டலம்:மதுரை, திண்டுக்கல், பழநி, சிவகாசி, விருதுநகர், தேனிக்கு 54,100.சிவகங்கை மண்டலம் :சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரத்திற்கு 19,000.திருநெல்வேலி மண்டலம்:திருநெல்வேலி, கோவில்பட்டி, கன்னியாகுமரி, தென்காசி, துாத்துக்குடிக்கு 51,700.வேலுார் மண்டலம்: வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, செய்யாறுக்கு 42,100.சேலம் மண்டலம் :சேலம், ஆத்துார், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு 59,800.கோவை மண்டலம்:கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரிக்கு 73,200.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE