எங்கெங்கு காணினும் சிலைகளடா!| Dinamalar

எங்கெங்கு காணினும் சிலைகளடா!

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (20)
Share
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில், குறிப்பாக, சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போது, கால் தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு சிலையின் காலடியில் தான் விழ வேண்டியுள்ளது. அவ்வளவு சிலைகள் நகர் முழுதும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்னுடைய சிறு வயதில், இதே சென்னை மாநகரில், 11 சிலைகள் தான் இருந்தன என்று சொன்னால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். உண்மையிலேயே சென்னையில், 1967 வரை,
உரத்தசிந்தனை, சிலை

இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில், குறிப்பாக, சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போது, கால் தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு சிலையின் காலடியில் தான் விழ வேண்டியுள்ளது. அவ்வளவு சிலைகள் நகர் முழுதும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்னுடைய சிறு வயதில், இதே சென்னை மாநகரில், 11 சிலைகள் தான் இருந்தன என்று சொன்னால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். உண்மையிலேயே சென்னையில், 1967 வரை, வெறும், 11 சிலைகள் தான் இருந்தன.

நம் நாட்டை மவுரியர்கள், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், ஹர்ஷர்கள், குஷானர்கள். கனிஷ்கர்கள், விஜய நகர பேரரசர்கள் போன்ற இனத்தவர்களும், பின், முகலாயர்களும், தென்னாட்டை சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், சாளுக்கியர்களும், நாயக்கர்களும், நவாப்களும் ஆண்டுள்ளனர்.


சுரங்க நடைபாதைஆனால், இந்த மன்னர்களில் யாரும் தங்களுக்கோ அல்லது தங்களது வாரிசுகளுக்கோ எங்கும் சிலை நிர்மாணிக்கவில்லை.இவர்கள் கோவில்களை கட்டி இருக்கின்றனர்; குடமுழுக்கு நடத்தி இருக்கின்றனர்; அணைகளை கட்டி இருக்கின்றனர்; பல்கலைக்கழகங்களை நிர்மாணித்து இருக்கின்றனர்.எனினும், யாரும் தங்கள் சிலைகளை நிறுவி, பெருமை தேடிக் கொள்ளவில்லை. உத்தர பிரதேசத்தில் வெறும், ஐந்தே ஐந்தாண்டு காலம் முதல்வராக இருந்த, பகுஜன் கட்சியைச் சேர்ந்த மாயாவதி, தன் கட்சி சின்னமான யானையை, மாநிலம் முழுதும் அரசு செலவில், ஆயிரக் கணக்கில் வடித்து வைத்துள்ளார்.

இன்றைக்கு சென்னை வாழ் மக்களுக்கு, 'ரவுண்டானா' என்றால், அண்ணா நகரில் இருக்கும் ரவுண்டானா தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால், அந்த அண்ணா நகர் ரவுண்டானா அமைவதற்கு முன்னரே, மவுன்ட் ரோடில் ஒரு ரவுண்டானா இருந்தது.இப்போது அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலை அமைந்திருக்கும் இடத்தில் தான், அந்த ரவுண்டானா இருந்தது. அதன் கீழ், பொது கழிப்பறை இருந்தது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப் பட்ட, அந்த பொதுக் கழிப்பிடம், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை திறந்திருக்கும். படு சுத்தமான பராமரிப்பில் இருக்கும். கடந்த, 1967ல், காங்., முதல்வர் பக்தவத்சலம் ஆட்சி காலத்தில், அந்த பொதுக் கழிப்பிடம் துார்க்கப்பட்டு, சென்னையில் முதல் சுரங்க நடைபாதை நிறுவப்பட்டது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழ் அறிஞர்கள், சிலப்பதிகார நாயகி கண்ணகி, விடுதலை போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வ.உ.சி., என, 10 பேருக்கு, சென்னை கடற்கரையில், துறைமுகம் துவங்கி, மஹாத்மா காந்தி சிலை இருக்கும் இடம் வரை சிலைகள் நிறுவப்பட்டன.

எம்.ஜி.ஆர்., தன் சொந்த செலவில், அப்போதைய முதல்வர் அண்ணாதுரைக்கு, அந்த பழைய ரவுண்டானா இருந்த இடத்தில், சுரங்க நடைபாதைக்கு மேலே ஒரு சிலையை நிறுவினார்.அரசியல்வாதிகளுக்கு சிலை நிறுவும் கலாசாரம், அப்போது தான் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, நாடெங்கும் ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோருக்கு ஆயிரக்கணக்கான சிலைகளை, அரசு செலவில் நிறுவ ஆரம்பித்தனர். நாட்டை நிர்வாகம் செய்ய என்று, நாட்டு மக்களிடம், பல்வேறு இனங்களில் வரியாக வசூலித்த தொகையை வைத்து, மாநிலம் முழுதும் இவர்கள் சிலைகளை நிறுவினர்.
அரசின் சாதனைஅடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகளின் அரசுகளும், வெறுமனே ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோருக்கு மட்டும் சிலைகளை வைத்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணல் அம்பேத்காரையும் இணைத்துக் கொண்டனர். 'கோவில் கருவறையில், அஷ்ட பந்தனத்தின் மீது, ஆகம விதிகளின் படி பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் கடவுள் சிலைகளுக்கு உயிர் உள்ளதா...' என்று கேட்கும் பகுத்தறிவுவாதிகள் தான், முச்சந்திகளில் சிலைகளை வைத்து பூஜித்தனர்.எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல், இயற்கையான முறையில் தான் மரணமடைந்தார். ஆனால், உணர்ச்சி வசப்பட்ட, அ.தி.மு.க., தொண்டர்களில் ஒருவர், ஏதோ, கருணாநிதி தான், எம்.ஜி.ஆரைக் கொலை செய்து விட்டது போல, தவறாக எண்ணி, அதே அண்ணா சாலையில். பிலால் ஓட்டலுக்கு எதிரில், திராவிடர் கழகம் நிறுவி இருந்த, கருணாநிதியின் சிலையை, கடப்பாரையால் பிளந்து நொறுக்கினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான், உயிருடன் உள்ளவர்களுக்கு சிலை வைப்பதில்லை என்ற முடிவை, திராவிட கட்சிகள் எடுத்தன. நாட்டு மக்கள், நெற்றி வியர்வை சிந்தி, உழைத்துக் கொடுக்கும் வரி வருமானங்களை, சிலைகள் வைத்து, அனாவசியமாக செலவு செய்வதில், இரு திராவிடக் கட்சிகளையும் அடித்து கொள்ள முடியாது. காமராஜர் ஆட்சியில் இருந்த போது, அரசின் சாதனைகளை விளக்கி ஒரு விளம்பரப் படம் எடுக்கலாமென அவரிடம் கூறி இருக்கின்றனர். அதற்கு, 2 லட்சம் ரூபாய் ஆகும் என்றும் சொல்லி இருக்கின்றனர்.


'போங்கய்யா! போய் வேலையைப் பாருங்க. அந்த இரண்டு லட்ச ரூபாயில நான் 2 பள்ளிக் கூடம் கட்டுவேன்' என்றாராம் காமராஜர். அது சரி. இவ்வளவு சிலைகளை நிறுவவும், அதை பராமரிக்கவும், பாதுகாப்பு கொடுக்கவும் ஏது பணம் என்ற கேள்வி வருகிறது அல்லவா!இங்கு தான், உலக வங்கி மெதுவாக உள்ளே நுழைகிறது.எப்படி பள்ளி -கல்லுாரி மாணவர்கள், நோட்டு வாங்க வேண்டும், புத்தகம் வாங்க வேண்டும்; கைடு வாங்க வேண்டும், ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று பொய்சொல்லி, பெற்றோரிடம் பணம் பறித்து, சினிமா, சிகரெட் வாங்க உபயோகித்துக் கொள்கின்றனரோ அதுபோலத் தான், அரசுகளும் பொய் சொல்லின.
மக்கள் நலத் திட்டங்கள், தொகுதி வளர்ச்சி திட்டங்கள், நீர் மேலாண்மை திட்டங்கள் என்ற பெயர்களில், திட்டங்களைத் தீட்டி, அவற்றை காட்டி, உலக வங்கியிடம் கடன் பெற்று, அந்தக் கடனில் ஒரு பகுதியை, இது போல சிலை நிறுவுவதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.


சமூக நீதிஅமைதியான நம் மாநிலத்தில், அடிக்கடி கலவரம் வருவதே, இந்த சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் தான். யாராவது ஒருவன், குடிபோதையில் ஏதாவது ஒரு தலைவரின் சிலையை சேதப்படுத்தி விட்டால் போச்சு. பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டு, அரசு சொத்துகள், பஸ்கள் எரிக்கப்பட்டு, பல நாட்களுக்கு பின் தான் அமைதி திரும்பும். இது தான், சமூக நீதி, பகுத்தறிவை காலம் காலமாக நாட்டு மக்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் கழகத்தினரின் செயல்.அத்துடன் விட்டனரா, 'கழக' ஆட்சியாளர்கள். ஜாதிய தலைவர்களை தேடிப் பிடித்து, அந்த தலைவர்கள் பெயரில், அரசு பஸ் போக்குவரத்து கழகங்களை துவக்கினர். ஒரு ஜாதியில் பிறந்த தலைவரின் பெயரிலான அரசு பஸ்சில், இன்னொரு ஜாதியினர் ஏற மறுத்தனர். அவர்களுக்குள் போட்டியை ஏற்படுத்திக் கொண்டு, அரசு பஸ்களை சேதப்படுத்தினர்.

அதன் பிறகு, புத்தி வந்த பிறகு தான், ஜாதிய தலைவர்கள் பெயர்களில் இயக்கப்பட்ட அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள், பொதுவாக, அந்தந்த கோட்டங்களுக்கான பெயர்களில் இயங்கின.அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. அரசின் சமூக நலத்திட்டங்கள் பலவற்றிற்க்கு, தங்கள் கட்சியின் முன்னோடி தலைவர்களின் பெயர்களை வைத்து, பெருமைப்பட்டுக் கொண்டனர்.இந்த நேரத்தில், நீங்கள் கேட்கலாம், 'பிரதமர் மோடி மட்டும், குஜராத்தில், வல்லபாய் படேலுக்கு, பிரமாண்ட சிலை வைக்கவில்லையா...' என!
ஆம், பிரதமர் மோடி வைத்தார். அவர் நினைத்திருந்தால், இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், வெண்கல சிலைகளை வைத்திருக்க முடியும். அப்படி வைக்காமல், ஒரே சிலையை, 182 மீட்டர் உயரத்தில் வைத்து, தினமும் அதை காண ஆயிரக்கணக்கானோர் வருமாறு செய்தார்.

அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மூலம், இன்னும் சில ஆண்டுகளில், சிலை அமைக்க செலவான மொத்த செலவையும் ஈடுகட்ட முடியும். அது தான், மோடியின் புத்திசாலித்தனம். காலத்தால் அழியாத கல்லணையை கட்டிய கரிகால சோழனுக்கு அந்த இடத்தில் சிலை கிடையாது. உலக கட்டடக் கலை வல்லுனர்கள் வியக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனுக்கு சிலைகளோ, நினைவிடங்களோ கிடையாது.ஆனால், தலைவர்கள் என தங்களுக்குத் தாங்களாகவே பெயர் கூட்டிக் கொண்டவர்களுக்கு, மாநிலம் முழுதும், அனைத்து ஊர்களிலும் சிலைகள்.

அந்த அளவுக்கு சிலையாக உள்ள தலைவர்கள் என்ன செய்தனர் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். சர்தார் படேலுக்கு பிரமாண்ட சிலை இருக்கிறது என்றால், சிதறிக்கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, இந்தியா என்ற நாடு உருவாக, அவர் காரணமாக இருந்தார். ஆனால், இவர்கள் சிலைகளாக வைக்கப்படும் சில தலைவர்கள், அப்படி ஏதாவது செயற்கறிய செயல்களை செய்துள்ளனரா; அல்லது அவர்களால், ஏதாவது ஒரு சமுதாயம் மேம்பட்டது என சொல்ல முடியுமா?கஜானாதி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளிடம், கட்சி நிதியாக கோடிக்கணக்கில் பணம் உள்ளது. எனினும், அவர்களின் சொந்தப் பணத்தை கொடுக்காமல், அரசின் கஜானாவை காலி செய்து, சிலைகளையும், நினைவிடங்களையும், மண்டபங்களையும் அமைத்து வருகின்றனர்.இங்கே இவர்களை தட்டிக் கேட்கவும் யாருமில்லை. நாடு முழுதும் சிலைகள் வைக்கப்பட்டதால் என்ன நன்மை என்பதை விளக்கவும், யாரும் இங்கு தயாராக இல்லை. எப்படியோ, இந்த பரபரப்பான காலத்தில், பறவைகள் தங்கி இளைப்பாறவும், எச்சங்களை போடவும் தான், பெரும்பாலான சிலைகள் உதவுகின்றன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிலை வைத்தவர்களுக்கு அவற்றை பராமரிக்கத் தெரியவில்லை. ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை, மாலைஅணிவிப்பதுடன் சரி. அதன் பின், அந்த பகுதியில் செல்லும் போது கூட ஏறிட்டு பார்க்க மாட்டார்கள். பின் எதற்கு அந்த சிலைகள்... இந்த கேள்விகள் இப்போது அதிகரித்துள்ளன. பதில் தான், திராவிட கட்சிகளிடம் இருந்து வர மாட்டேன் என்கிறது!

எஸ்.ராமசுப்ரமணியன்

எழுத்தாளர்

தொடர்புக்கு: இ -- மெயில்: essorres@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X