புதுடில்லி:இந்தியா - நேபாளம் இடையேயான எல்லை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும் என, அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப்குமார் கியாவாலி கூறியுள்ளார்.
சர்ச்சை பகுதி
எல்லை பிரச்னை தொடர்பாக, இந்தியா- - நேபாள கூட்டு ஆணைய கலந்தாய்வு கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. இதில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப்குமார் கியாவாலி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, நேபாள வெளியுறவு அமைச்சர் கூறியதாவது:
இரு நாடுகளின் எல்லை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண்பதே, நம் நிலைப்பாடாக உள்ளது. எல்லை வரையறையில், 97 சதவீதத்தை, இரு நாடுகளும் ஏற்று உள்ளன. சர்ச்சைக்குரிய கலபானி பகுதி தொடர்பான, எங்கள் நிலை சரியானது. எல்லையின் புனிதத்தை நாம் பராமரிக்க வேண்டியது அவசியம்.
அனுமதி
இரு நாடுகளின் எல்லை வரைபடம் உருவாக்கும் பணிகள், 1981ல் துவங்கியது. அதில் கலபானி உட்பட இரு பிரிவுகள் தொடர்பான பணிகள், இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்திய சர்வேயர் ஜெனரல் மற்றும் நேபாள பிரதிநிதி தலைமையிலான எல்லை செயல்பாட்டு குழுவினர், இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை, இரு நாடுகளின் வெளியுறவு செயலர்களும் கண்காணிக்க வேண்டும்.
இதன் வாயிலாக இரு நாடுகளின் எல்லை பிரச்னை, வரலாற்று ரீதியிலான முடிவை எட்டும். எல்லை பிரச்னை இருந்தாலும், இந்தியாவின் கூர்க்கா படை பிரிவுகளில், எங்கள் நாட்டினர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்போம்.எங்களுக்கும் சீனாவுக்குமான உறவை, இந்திய உறவுடன் ஒப்பிட விரும்பவில்லை. இரு நாடுகளுடனும் சிறந்த உறவை பேணும் நாங்கள், எங்களின் உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE