தேர்தல் நெருங்குவதால், ஹிந்துக்களின் ஓட்டுக்களை கவர, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுவதாக, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரும், கட்சியினரும் சாமி கும்பிடுவதாக, திடீர் ஒப்புதல் அளித்துள்ளார். பிரசார களத்தில் எழுந்துள்ள, பா.ஜ., - அ.தி.மு.க.,வின் கடும் எதிர்ப்பை முறியடிக்க, தி.மு.க., தலைமை நாடகம் ஆடுவதாகவும், 'பாச்சா' பலிக்காது என்றும், சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
பொங்கல் விழாவை ஒட்டி, ஸ்டாலின், தன் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன், சமத்துவ பொங்கல் கொண்டாடினார். மாட்டு பொங்கலை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், உளுந்துாரில் உள்ள, தன் பண்ணை வீட்டு தோட்டத்தில், மாட்டு வண்டி ஓட்டினார். மாடுகளுக்கு வாழை பழங்களை வழங்கினார்.
பழி சுமத்துகிறது
பொங்கல் விழாவில், ஸ்டாலின் பேசுகையில், ''தி.மு.க.,வை ஹிந்துக்களுக்கு எதிரி போல, பா.ஜ., சொல்லி வருகிறது. என் மனைவி போகாத கோவிலே கிடையாது. மாவட்ட செயலர்கள், நெற்றியில் குங்குமம் வைத்திருப்பர். பா.ஜ., திட்டமிட்டு, சதி செய்து, தி.மு.க., மீது பழி சுமத்துகிறது,'' என்றார்.
தன் மனைவி துர்கா, கோவில்களுக்கு செல்வதையும், கட்சியினர் சாமி கும்பிடுவதையும், ஸ்டாலின் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளதால், அவரது பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மாற்று மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின், ஹிந்து மதத்தை சிலர் இழிவாக பேசுவதை வேடிக்கை பார்ப்பதும், ரசிப்பதும் வழக்கம். அதை மையமாக வைத்து, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர், தற்போது பிரசார களத்தில் பேசி வருகின்றனர். இதனால், ஹிந்துக்கள் மத்தியில், தி.மு.க., மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை போக்கவும், இரு கட்சிகளின் எதிர்ப்பை முறியடிக்கவும், ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். ஹிந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காக, ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார் என, சமூக வலைதளங்களில், பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
விழிப்புணர்வு
சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள்:
* எந்த ஆண்டும் இல்லாமல், இந்த பொங்கலுக்கு, ஸ்டாலின் தரப்பில் இருந்து, பொங்கல் கொண்டாடும் புகைப்படங்கள் அதிகம் வெளியிடப்பட்டன. அதற்கு மிக முக்கிய காரணம், தமிழக ஹிந்துக்களிடம் ஏற்பட்ட பெரிய விழிப்புணர்வு தான்
* இந்த தடவை வரும் தேர்தலில், ஹிந்து மக்கள், இவர்களை புறக்கணித்தால் போதும்; அடுத்த தடவை, தைப்பூசத்திற்கு பால் காவடி எடுக்கவும் தயங்க மாட்டார்கள்
* உங்கள் இரட்டை வேட நடிப்பு, உலகிற்கே தெரியும். உங்களின் போலி தன்மையை படம் பிடித்து காட்டியுள்ளது. பதவிக்காக, பழநிக்கு காவடி எடுப்பதற்கும், நீங்கள் தயார்; மக்கள் ஏமாற தயாரில்லை
* திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், ஹிந்துக்களை விமர்சித்து விட்டு, இன்று, 'என் மனைவியும், மாவட்ட செயலர்களும் செல்லாத கோவில்களே இல்லை' என, சொல்கிறார். பழநிக்கு பாத யாத்திரை போனாலும் சரி... பார்த்தசாரதி கோவிலில் புளியோதரை சாப்பிட்டு, நாமம் போட்டாலும் சரி; உங்கள் நாடகம் செல்லுபடியாகாது; பாச்சா பலிக்காது. இவ்வாறு, ஸ்டாலின் பேச்சை விமர்சித்து, வலை தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE