சென்னை: 'கமல் அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் எளிதில் புரிவதில்லை' என, மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அவரின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னம் கிடைத்த உற்சாகத்தில், தொழில் துறை வளர்ச்சிக்கான, ஏழு உறுதிமொழிகளை அறிவித்தார்.
அதில், புத்தாக்கம் மற்றும் புதிய சாத்திய கூறுகளுக்கான துறை, தொழில் துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை, சிறு மற்றும் குறு நிறுவனங்களை வலுப்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற விஷயங்களை தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று, 'டுவிட்டரில்' ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அவர் கூறியுள்ளதாவது:'ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில், ஏழு யானைகள் உண்ணும் அளவிற்கு, தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது' என்கிறது, புறநானூறு. வேளாண்மை என்ற சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும், 'பெர்சனலைஸ்டு மானியம்' மக்கள் நீதி மையத்தின் செயல் திட்டம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கமலின் அறிவிப்புக்கு, மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்தாலும், பலர் குழப்பத்தில் தான் உள்ளனர்.
கமல் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி, சிலர் கூறியுள்ளதாவது: தலையை சுற்றி மூக்கைத் தொடாமல், சொல்வதை தெளிவாக, நச்சென்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், கமல்.குழப்பமாய் பேசுவது, உங்கள் அதிமேதாவித்தனம் என, நீங்கள் நம்புவதாக, நாங்கள் நம்புகிறோம். அதுவே மக்களை விட்டு, உங்களை தூரமாக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE