இந்திய நிகழ்வுகள்
ஆந்திராவில் 60 பஸ்கள் பறிமுதல்
திருப்பதி:தமிழக அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான, 60 பஸ்களை விடுவிக்க, ஆந்திரா மாநில அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுாருக்கு இயக்கிய, 54 தமிழக அரசு மற்றும் ஆறு தனியார் பஸ்களை, கடந்த இரண்டு நாட்களாக, ஆந்திரா மாநிலம் போக்குவரத்து அதிகாரிகள் திருப்பதி, சித்துார் ஆகிய பகுதிகளில் பறிமுதல் செய்தனர்.வேலுார், அரசு போக்கு வரத்து அதிகாரிகள் திருப்பதி சென்று, பேச்சு நடத்தினர். இருப்பினும், பஸ்களை விடுவிக்க, ஆந்திரா அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆந்திர மாநிலம், சித்துார் போக்குவரத்து அதிகாரிகளை கேட்டதற்கு, 'ஆர்சி புக், பர்மிட், நடத்துனர், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின், உண்மை பிரதிகள் இல்லாததால், தமிழக அரசு பஸ்களை பறிமுதல் செய்து உள்ளோம்' என்றனர்.
தமிழக நிகழ்வுகள்
மாந்திரீகம் செய்தவர் ஊரை விட்டு வெளியேற்றம்

ராமநாதபுரம்:மாந்திரீகம் செய்த வாலிபர், பொதுமக்கள் எதிர்ப்பால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே, வாலிநோக்கத்தைச் சேர்ந்த, முகம்மது அலி ஜின்னா. இவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக வேலுாரை சேர்ந்த ஷேக் இப்ராகீம், 35, என்பவர் தங்கியிருந்து குறி சொல்லுதல், மாந்திரீக வேலைகள் செய்து வந்துள்ளார். சுற்று வட்டார கிராம மக்கள் பலர், இவரிடம் நள்ளிரவு பூஜைகளுக்கு வந்து சென்றுள்ளனர்.
இவர்களது நடமாட்டம், வினோத வழிபாட்டு சடங்குகளைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத், த.மு.மு.க., உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். அவர் தங்கியிருந்த வீட்டின் உள்ளே சென்ற போது, 13 வயது சிறுமியின் கைகளில், ரத்தக்காயம் ஏற்படுத்த முயன்றார். அவரிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டார்.கிராம மக்களின் கோரிக்கையை அடுத்து, ஷேக் இப்ராகீமை வாலிநோக்கம் இன்ஸ்பெக்டர் ராதா எச்சரித்து ஊரைவிட்டு வெளியேற்றினார்.
* கோவை:அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, லேப்-டாப் திருடியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* ஈரோட்டில் மில் அதிபர் வீட்டில், 45 சவரன் நகை, 95 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது
100 பவுன் நகை கொள்ளை
கோவை:கோவை டாடாபாத் ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 42; நெய் மொத்த வியாபாரி. இரு தினங்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார்.
வீட்டில் பணிபுரியும் பெண் நேற்று வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்த புகார்படி, கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
வீட்டில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, 100 சவரன் நகையை திருடிச் சென்றது தெரிந்தது.கொள்ளையடித்த மர்ம நபர்கள், மோப்ப நாய் தங்களை கண்டறிந்து விடக்கூடாது என்பதற்காக முட்டை மசால் துாளை துாவிச் சென்றுள்ளனர். வீட்டின் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்ணிடம் ரூ 1.34 லட்சம் மோசடி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் பொன்குள பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருக்கு அலைபேசியில் வங்கியிலிருந்து பேசுவது போல கூறி ஏ.டி.எம்.,கார்டு, பின் நம்பரை கேட்டனர். இதனை நம்பி ஏ.டி.எம்., கார்டு, பின்விபரத்தை மீனா கூறியுள்ளார். இதனை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில்இருந்த ரூ.1.34,997 பணத்தை எடுத்துள்ளனர்.மீனாவுக்கு வந்த அலைபேசி எண்களை அடிப்படையாக கொண்டு மோசடி நபர்கள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
உலக நடப்பு !
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நீதிமன்ற வாகனத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த 2 பெண் நீதிபதிகள் துப்பாக்கி ஏந்தியவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE