சென்னை : கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பினால் மிகவும் கடினமான காலகட்டமாக அமைந்தது என்றும், ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கு உதவியது என்றும், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பாதிப்பு : சென்னை நிகழ்ச்சி ஒன்றுக்காக, காணொலி மூலம் கலந்து கொண்டவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:இப்போது பின்னால் திரும்பி பார்த்தால், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை எளிதாக்க எவ்வளவு துாரம் உதவியாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.நிதி ஸ்திரத்தன்மை என்பது, பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும். அதன் வலுவான தன்மை, அதனுடன் தொடர்புடைய அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும்.பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
நிதி ஸ்திரத்தன்மையில் சமரசம் செய்யாமல், வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க, ரிசர்வ் வங்கி உறுதியுடன் உள்ளது.நாங்கள் அனைத்து வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், கொரோனா பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினோம். குறிப்பாக, அவற்றின் பண இருப்பு நிலை, பணப்புழக்கம். கொரோனாசொத்துக்களின் தரம், மூலதனம் போன்றவற்றில் கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யச் சொன்னோம்.

புத்திசாலித்தனமாக ஒரு சில பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ஏற்கனவே தேவையான மூலதனத்தை திரட்டி உள்ளன. மேலும், தீங்கற்ற வழிகளில் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE