புதுடில்லி: பயணியருக்கு, 'இ - கேட்டரிங்' முறையில் உணவுகளை தயாரித்து வழங்க, ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ரயில்களில் செயல்பட்டு வந்த உணவு தயாரிப்பு, 'கேன்டீன்'கள் முடங்கின.

இந்நிலையில், பயணியருக்கு, 'இ - கேட்டரிங்' முறையில் உணவு பொருட்களை வழங்க ரயில்வே அமைச்சகம் பரிந்துரையின்படி, இந்திய ரயில்வேயின் உணவு தயாரிப்பு மற்றும் சுற்றுலா கழகம் அனுமதி அளித்துள்ளது.இந்த சேவைகளை மேற்கொள்ளும், 'ரயில் ரெஸ்ட்ரோ' நிறுவனத்தினர், 2,000க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில், உணவு தயாரிப்பு கூடங்களை நிறுவியுள்ளனர். இங்கு பணியில் இருக்கும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது.
'ஆரோக்கிய சேது ஆப்' வாயிலாக, பயணியரிடம் இருந்து உணவுகளுக்கான, 'ஆர்டர்' பெறப்பட்டு, அடுத்துள்ள ரயில் நிலையத்தில், அவர்களுடன் நேரடி தொடர்பின்றி பாதுகாப்பான இடைவெளியில் வழங்கப்படும். வினியோக பணியில் ஈடுபடுவோரும், மத்திய, மாநில அரசுகளின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுவர்.

இ -- கேட்டரிங் உணவகங்கள் இம்மாத இறுதியில் செயல்பட துவங்கும் என்பதுடன், தரமான, சுகாதாரமான உணவுகள் பயணியருக்கு வழங்கப்படும் என, ரயில் ரெஸ்ட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE