பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடிக்க, முதல் இன்னிங்சில் 336 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன் எடுத்து, 307 ரன்கள் பின்தங்கி இருந்தது. புஜாரா (8), ரகானே (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு அரைசதம்
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக துவங்கியது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா 25 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரகானே 37 ரன்னில் திரும்பினார். மயங்க் அகர்வால் 38, ரிஷாப் பன்ட் 23 ரன்கள் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் இணைந்து போராடினர். ஷர்துல் தாகூர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் எட்டினார். மறுபக்கம் இவருக்கு கைகொடுத்த அறிமுக வீரர் சுந்தர் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

7 வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த போது, ஷர்துல் தாகூர் 67 ரன்னுக்கு அவுட்டானார். சைனி 5 ரன்கள் எடுக்க, வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து திரும்பினார். கடைசியில் சிராஜ் (13) போல்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நடராஜன் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ேஹசல்வுட் அதிகபட்சம் 5 விக்கெட் சாய்த்தார்.
முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலையுடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து, 54 ரன்கள் முன்னி்லை பெற்றிருந்தது. வார்னர் (20), ஹாரிஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

74 ஆண்டுக்குப் பின்...
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் அறிமுக 'ஆல் ரவுண்டராக' களமிறங்கிய தத்து பத்கர், 1947 சிட்னி டெஸ்டில் 3/14 விக், 51 ரன் எடுத்தார். தற்போது 74 ஆண்டுக்குப் பின் இந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீரர் ஆனார் வாஷிங்டன் சுந்தர். பிரிஸ்பேன் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்து, பேட்டிங்கில் 62 ரன்கள் எடுத்தார்.

* அறிமுக 'ஆல் ரவுண்டராக' களமிறங்கி 3 விக்கெட் சாய்த்து, அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார் வாஷிங்டன் சுந்தர்.
* தவிர, தத்து பத்கல், ஹனுமா விஹாரிக்குப் பின் (56 ரன், 3/37, ஓவல், 2018) இதுபோல அசத்திய மூன்றாவது இந்தியர் ஆனார் வாஷிங்டன் சுந்தர்.

* ஆஸ்திரேலியாவில் அறிமுகம் ஆகி, பேட்டிங்கில் 7 வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆனார் வாஷிங்டன் சுந்தர் (62 ரன்). ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் 7 வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் டிராவிட் (95, இங்கிலாந்து, 1996), நட்கர்னிக்கு (68, நியூசி, 1955) அடுத்த இடம் பெற்றார் வாஷிங்டன் சுந்தர்.

* தவிர அமர் சிங், தத்து பத்கல், கங்குலி, ஹனுமா விஹாரிக்குப் பின் அறிமுக போட்டியில் களமிறங்கி 3 விக்கெட், அரைசதம் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் வாஷிங்டன் சுந்தர். இவை அனைத்தும் அன்னிய மண்ணில் நடந்தது ஸ்பெஷல் தான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE