காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நீதிமன்ற வாகனத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த 2 பெண் நீதிபதிகள் துப்பாக்கி ஏந்தியவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக காபூலில் மிக முக்கிய நபர்களை குறிவைத்து கொல்லும் போக்கை கடைபிடிக்கின்றனர். இது நகரில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிறு காலை ஆப்கன் உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் நீதிபதிகளை அப்பகுதியில் பதுங்கியிருந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆப்கானிஸ்தானில் துருப்புக்களின் அளவை 2,500 ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்தது. கடந்த 20 ஆண்டுகால போரில் இதுவே அமெரிக்க படைகளின் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். அதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அகமது பாஹிம் காவிம் மற்றும் காபூல் போலீசார் நீதிபதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் 200 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE