புதுடில்லி: ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பாக, போரிஸ் ஜான்சன் இந்தியா வர வாய்ப்பு உள்ளதாக, இந்தியாவிற்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கிய அமைப்பு ஜி7 என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு, வரும் ஜூன் 11 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், கொரோனா வைரசை ஒழித்தல், பருவநிலை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அறிவியல் பலன்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வர்த்தக விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர வாய்ப்பு உள்ளது. உலக நாடுகளுக்கு மருந்து வழங்கும் முக்கிய நாடு இந்தியா. ஏற்கனவே, கொரோனா தடுப்பு மருந்தில் 50 சதவீதம் அளவு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்து வாய்ப்புகளை பலப்படுத்தவும், பசுமையான சுத்தமான மற்றும் வளர்ச்சியான எதிர்காலத்திற்கு ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்ட இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களிடம் வலியுறுத்த போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசானது, அழிவு சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்முன் உள்ள சவாலை ஒற்றுமையுடன் சந்தித்தே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதுவே நம்முன் உள்ள ஒரே வழி என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE