வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முக்கிய நிர்வாக பணிக்குழுவில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு, வரும் 20ம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் மற்றும் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி ஏற்றவுடன் அவர்களது அரசின் நிர்வாக பணியை கவனிப்பதற்கான நபர்களை பணி அமர்த்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிர்வாக பணிக்குழுவில் 13 பெண்கள் உட்பட சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்-ம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனின் நிர்வாக பணிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டோர் அடங்கிய பட்டியலின் முதலிடத்தில் வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நீரா டாண்டன் மற்றும் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக டாக்டர் விவேக் மூர்த்தி பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நீதித்துறையின் அசோசியேட் அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலராக உஸ்ரா ஜியா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலிலும் அமெரிக்க வாழ் இந்தியரான பாரத் ராமமூர்த்தி இடம்பெற உள்ளார். அவர் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிர்வாக பணிக்குழுவில் இடம்பெற உள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE