புதுடில்லி: 'நாடு முழுதும், கடந்த இரு நாட்களாக நடந்த கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில், இதுவரை, 2.24 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில், 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. அதில், மூன்று பேரை மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து, ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கிய, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பு மருந்தை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம், தயாரித்து, வினியோகிக்கிறது.தெலுங்கானாவின், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பு மருந்தை, உள்நாட்டிலேயே தயாரித்து வினியோகித்து வருகிறது.
அனுமதி
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளின் அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு, முதல்கட்டமாக இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பின், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின், பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட, 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, நேற்று முன் தினம் துவங்கியது. நம் நாடு, 130 கோடி மக்கள் தொகை உடையது என்பதால், உலக அளவில் நடக்கும், மிக பிரமாண்டமான தடுப்பூசி செலுத்தும் பணியாக, இது கருதப்படுகிறது.
இதை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன் தினம் துவக்கி வைத்தார். முதல் நாளில் மட்டும், 3,352 அமர்வுகளில், இரண்டு லட்சத்து, ஏழு ஆயிரத்து, 229 பேருக்கு, நாடு முழுதும் தடுப்பூசி போடப் பட்டது. உ.பி.,யில், அதிகபட்சமாக, 21 ஆயிரத்து, 291 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அடுத்தபடியாக, ஆந்திராவில், 18 ஆயிரத்து, 412 பேருக்கும், மஹாராஷ்டிராவில், 18 ஆயிரத்து, 328 பேருக்கும், பீஹாரில், 18 ஆயிரத்து, 169 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன.
ஆர்வம்
இதில், தமிழகம், டில்லி, கர்நாடகா உள்ளிட்ட, 11 மாநிலங்களில் மட்டும், 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அருணாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே, தடுப்பூசி வழங்கும் பணிகள் நடந்தன.
இந்த ஆறு மாநிலங்களில், 553 அமர்வுகளில், 17 ஆயிரத்து, 72 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதன் வாயிலாக, கடந்த இரு நாட்களில், மொத்தம், இரண்டு லட்சத்து, 24 ஆயிரத்து, 301 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில், 447 பேருக்கு ஒவ்வாமைகள் ஏற்பட்டன. அதில், மூன்று பேரை மட்டுமே, மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.
டில்லியில் 52 பேருக்கு ஒவ்வாமை
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும், 25 வயது மதிக்கத்தக்க பாதுகாவலர், நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்தப்பட்ட, 20 நிமிடங்களில், அவரது இதயத் துடிப்பு அதிகரித்து, அவரது உடலில் தடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு முழுதும், டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
தற்போது, அவர் நலமுடன் இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.டில்லியில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேலும், 51 சுகாதாரப் பணியாளர்களுக்கு, லேசான ஒவ்வாமைகள் ஏற்பட்டதாகவும், அவர்கள் கண்காணிப்புக்கு பின், வீடு திரும்பியதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
வதந்தியை நம்ப வேண்டாம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது :இரண்டு தடுப்பூசிகளும், அறிவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை பொறுமையுடன் காத்திருந்து, பயமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி செலுத்தும் பணிகளில், இதுவரை பிரச்னை ஏற்படவில்லை. சிலர் அரசியல் ரீதியாக கேட்கும் கேள்விகளுக்கு, முறையான பதில்களை அளித்து வருகிறோம். எனவே, தவறான தகவல்களை நம்பாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE