பொங்கலன்று தமிழகத்திற்கு வந்த ராகுல், மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், ஜல்லிக்கட்டையும் பார்த்து ரசித்தார். இந்த விவகாரம் டில்லியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்திஉள்ளது.இத்தாலி சென்றிருந்த ராகுல், ஜன., 10ம் தேதி இந்தியாவிற்கு திரும்பினார். 'இப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், ஐந்து நாட்களாவது தனிமையில் இருக்க வேண்டும்' என்பது, கொரோனா பாதுகாப்பு நடைமுறை. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், ராகுல், 14ம் தேதி தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், ராகுலின் இந்த பயணம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
போட்டு கொடுப்பது யார்?
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தலைமை பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஒரு பக்கம் தினகரனோடு ரகசிய பேச்சு, இன்னொரு பக்கம், ஸ்டாலின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்து வருகிறது. ஸ்டாலின் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன. மகன், மருமகன் என உள்ளுக்குள் பல விவகாரங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன. இப்படி குடும்பத்திற்குள் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும், பா.ஜ., தலைமைக்கு தெரிந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி., ஒருவர் தான், இந்த குடும்ப விஷயங்களை, பா.ஜ., தலைமைக்கு போட்டு கொடுத்து வருவதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த எம்.பி., பிரதமர் மோடியை அடிக்கடி சந்தித்து, தி.மு.க., குடும்ப விவகாரங்களை தெரிவிக்கிறாராம். அந்த எம்.பி., பல விஷயங்களில் சிக்கலில் இருக்கிறாராம்; அதிலிருந்து வெளிவரவே, இப்படி செய்கிறாராம். தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அவர், பா.ஜ., தலைவர்களிடம் தெரிவித்துள்ளாராம்.
பிரதமர் பிரசாரம் எங்கு?
தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில், பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதை, பா.ஜ., தலைமையும், பிரதமரின் பாதுகாப்பு குழுவும் முடிவு செய்ய உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில், மோடி எங்கு பிரசாரம் செய்தாரோ, அங்கு இந்த முறை போக மாட்டார் என்கின்றனர். தமிழகத்தில், மதுரை, திருநெல்வேலி, கோவை உட்பட ஐந்து இடங்களில், மோடி பிரசாரம் செய்ய உள்ளாராம். சென்னையில், பிப்., இறுதியில் ஒரு மெகா பேரணி நடத்த, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகள், இந்த பேரணியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
காகிதமில்லா பட்ஜெட் ஏன்?
இந்த முறை பார்லிமென்டில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையால், அரசுக்கு, 140 கோடி ரூபாய் மிச்சம் என சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையான காரணம் வேறொன்று என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் அச்சடிக்கப்படும்போது, ரகசியம் காக்கப்படும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள், பணி முடியும் வரை, இங்கேயே தங்கியிருக்க வேண்டியது ஏற்படும். இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும், பட்ஜெட் பற்றிய சில விபரங்கள், தொழிலதிபர்களுக்கு, முன் கூட்டியே கசிந்து விடுகின்றன. இதை, அந்த தொழில் அதிபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்கவே, காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE