'தமிழக காங்கிரசும், மக்கள் நீதி மையம் கட்சியும் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியும்' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், தெரிவித்துள்ளார். அவரது கருத்து, தி.மு.க.,வுக்கு விடப்பட்ட மிரட்டலா அல்லது கமலுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையில், புது கூட்டணி அமைய உள்ளது. அம்மாநிலத்தில், கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சிவகங்கை தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், 'டுவிட்டர்' பக்கத்தில், 'கமல், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்' என, பதிவிட்டுள்ளார்.அவரது கருத்து, தி.மு.க.,வில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.சமீபத்தில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசும்போது, 'தி.மு.க., அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்' என்றார்.அதனால், அவர் மீது, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்தன.
இந்நிலையில், 'மக்கள் நீதி மையம் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற முடியும்' என, கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து, தி.மு.க.,வுக்கு விடப்பட்ட மிரட்டலாக கருதப்படுகிறது. மேலும், காங்கிரசை, தி.மு.க., கழற்றி விட்டால், கமலுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குவோம் என்பதையும், தி.மு.க.,வுக்கு அவர் உணர்த்தியுள்ளார் என்கிறது, சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.
ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு தவிர்ப்பு?
தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் செய்ய, 23ம் தேதி, கோவை வருகிறார், ராகுல். திருப்பூர், கரூர், மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, அங்கிருந்து விமானம் வாயிலாக, டில்லி செல்கிறார். அவரது பயணத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் இல்லை. சமீபத்தில், மதுரையில் ஜல்லிக்கட்டு காண வந்த ராகுல், ஸ்டாலினை சந்திப்பதையும் தவிர்த்தார். இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்திலும், ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு இல்லாததால், கூட்டணியில் விரிசல் உறுதியாகி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE