சென்னை: ''சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலையீடு, கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லை,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவதால், தமிழகத்தில், எந்தவித தாக்கமும் ஏற்படாது. அவரும், அவரை சார்ந்தவர்களும் இல்லாத நிலை என்பதே, எங்கள் நிலைப்பாடு. சசிகலாவை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதே, தொண்டர்கள் விருப்பம். அதன் அடிப்படையில் எடுத்த நிலையில், உறுதியாக உள்ளோம்.சசிகலா குடும்பத்திடம் ஏராளமாக பணம் உள்ளது.
அதை வைத்து, செயற்கையாக மாயை ஏற்படுத்தலாம். அதனால், எந்த பாதிப்பும் இருக்காது. சசிகலா வந்தாலும், யாரும் போக மாட்டார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்; ஆனால், அந்த நிலைமை வராது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எந்த நோக்கத்திற்காக கட்சியை துவக்கினரோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.
மத்திய அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதற்கு நிதி பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் நலன் கருதியே, முதல்வர் டில்லி செல்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.மின்சார பஸ் திட்டம்போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது: மின்சார பஸ்கள் இயக்கும் திட்டம் கைவிடப்படவில்லை.
ஜெர்மனி வங்கியில் கடனுதவி பெற்று, மின்சார பஸ் இயக்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்து, இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையும் போது, மின்சார பஸ்கள் இயக்கப்படும். பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து, பழைய, 'பாஸ்' அட்டையை காட்டினால், இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.