சென்னை: ''தமிழகம் முழுதும், ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி அமையும். ஐந்து ஆண்டுகளில், வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற, நிலையை ஏற்படுத்துவோம்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சென்னை அசோக் நகரில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:கொரோனா வைரசை கட்டுப்படுத்த, அரசு தவறி விட்டதாக, ஸ்டாலின் கூறியிருந்தார். தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக, இன்று, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், 'அம்மா கிளினிக்' துவக்கி உள்ளோம். சென்னை மாநகர மக்களுக்கு, ஓராண்டு மழை இல்லாவிட்டாலும், தினமும் குடிநீர் கிடைக்கும் வகையில், ஏரிகளை நிரப்பி வைத்துள்ளோம். சென்னையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல்வேறு பாலங்களை கட்டி உள்ளோம். ஸ்டாலின் மேயராக இருந்த போது, சென்னை மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்; அதை செய்யவில்லை.

தற்போது, மழை பெய்தபோது, 'தண்ணீர் தேங்கி இருக்கிறது' என்கிறார். மேயராக இருந்த போது துாங்கிக் கொண்டிருந்தாரா என்று, தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால், ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து, மக்களிடம் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளை, புள்ளிவிபரங்களோடு மறுக்கிறேன்.
'நீட்' தேர்வை ரத்து செய்யுமாறு, ஸ்டாலின் கூறுகிறார். அதை கொண்டு வந்ததே, அவர்கள் தான். மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.சென்னை உட்பட, தமிழகம் முழுதும், ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும்.
அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி அமையும். ஐந்து ஆண்டுகளில், வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம். தமிழகத்தில், ஏழைகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.'அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வராது. 234 தொகுதிகளிலும், தி.மு.க., ஜெயிக்கும்' என, ஸ்டாலின் கூறியுள்ளார். கனவில் வேண்டுமானால், அவர் ஜெயிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
பிரதமருக்கு அழைப்பு!
முதல்வர் பேசியதாவது: மெட்ரோ ரயில் திட்டம் - 1 முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணியாக, வண்ணாரப்பேட்டை - விம்கோ வரை பணிகள் முடிந்துள்ளன. இப்பகுதியில், மெட்ரோ ரயில் சேவையை, விரைவில் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். நாளை பிரதமரை சந்தித்து, அழைப்பு விடுக்க உள்ளேன். அவர் தேதி கொடுத்ததும், ரயில் சேவை துவக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE