சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., இன்று டில்லி சென்றார். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், முதல்வர் இ.பி.எஸ்., இன்று காலை, 11:55 மணிக்கு, டில்லி செல்கிறார். இரவு, 7:30 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கான தொகுதிகள் குறித்து பேசப்படுகிறது.
மேலும், கூட்டணி விவகாரம், பிற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்தும், அமித் ஷாவுடன் பேசி இறுதி செய்ய உள்ளார். மேலும், சசிகலா தொடர்பாக வரும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்றும், கூறப்படுகிறது.நாளை காலை, 11:00 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் இ.பி.எஸ்., சந்திக்கிறார். பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதுடன், மத்திய திட்டங்களுக்கு வர வேண்டிய நிதி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு கோரி, பிரதமரிடம் மனு அளிக்க உள்ளார்.

இந்த சந்திப்புகளை முடித்து, நாளை இரவு, முதல்வர் சென்னை திரும்புகிறார். இதற்கிடையில், சென்னையில் கட்டப்பட்டுள்ள, ஜெ., நினைவிடம் திறப்பு விழாவிற்கு, பிரதமரை அழைக்க உள்ளதாக வெளியான தகவலை, அரசு தரப்பில் மறுத்துள்ளனர். ஜெ., நினைவிடத்தை, முதல்வரே திறந்து வைப்பார். பிப்ரவரி முதல் வாரத்தில் திறப்பு விழா இருக்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE