லக்னோ: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான, ‛தாண்டவ்' வெப் சீரிஸில், இந்து கடவுள்களை ஏளனம் செய்யும் வகையில் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அமேசான் பிரைம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
நடிகர்கள் சைப் அலி கான், டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்த வெப் சீரிஸ் ‛தாண்டவ்'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த வெப் சீரிஸை அலி அப்பாஸ் ஸாபர் இயக்கியுள்ளார், 'ஆர்டிகள் 15' திரைப்படத்தின் கதாசிரியர் கவுரவ் சொலாங்கி எழுதியுள்ளார். இந்த வெப் சீரிஸில் இந்துக் கடவுள்களை ஏளனம் செய்ததாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.

இந்துக்களின் உணர்வுகளையும், இந்துக் கடவுள்களையும் தாண்டவ் தொடரில் வேண்டுமென்றே புண்படுத்தியதாகவும், இதனால் இந்தத் தொடரை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பா.ஜ., எம்.பி மனோஜ் கோடக் தெரிவித்துள்ளார். , இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக இதன் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோடக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ., தலைவர் ராம் கதம், இந்து தெய்வமான சிவனை கேலி செய்யும் வகையில் இந்த தொடரில் வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக, மஹாராஷ்டிராவின் மேற்கு காட்கோபர் போலீஸ் நிலையத்திலும் ராம் கதம், புகார் அளித்தார். இந்நிலையில், மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், தாண்டவ் தொடர் தொடர்பாக அமேசான் ப்ரைம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் ஹஸ்ராட்கன்ஞ் போலீஸ் நிலையத்தில் வெப் சீரிஸ் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE