புதுடில்லி :குடியரசு தினமான, வரும், 26ல், டில்லியில் விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், 'இது சட்டம் - ஒழுங்கு பிரச்னை; இதில் சரியான முடிவெடுக்கும் முதல் முழு அதிகாரம், டில்லி போலீசுக்கே உள்ளது'
என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசுடன் பல சுற்று பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை.
'சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என்பதை, விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், 'சட்டங்களை திரும்பப் பெற முடியாது. விவசாயிகள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்த தயார்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகள் போராட்டங்களை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று சட்டங்களையும் செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், நான்கு பேர் உடைய, நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் இருந்து விலகுவதாக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் புபிந்தர் சிங் மான் அறிவித்தார்.இதற்கிடையே, குடியரசு தினமான, 26ம் தேதி, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்தன. குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், எந்தப் பேரணியையும், போராட்டத்தையும் நடத்த தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், ''விவசாயிகள் டில்லியில் போராட்டம், பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்துள்ளனர். ''குடியரசு தினத்தன்று இவ்வாறு பேரணி நடத்துவது, சர்வதேச அரங்கில், நம் நாட்டுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்,'' என, குறிப்பிட்டார்.இ
தையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: போராட்டம், பேரணி நடத்துவது என்பது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை; அதை சமாளிக்கும் முதல் முழு அதிகாரம் போலீசாருக்கு உள்ளது. போலீசாருக்கு என்ன அதிகாரம் உள்ளது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கூற வேண்டுமா? அதை சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. டில்லிக்குள் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை, டில்லி போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் டில்லி போலீஸ் முடிவெடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை, 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'நிபுணர் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு, நடுநிலையான புதிய நிபுணர்களை நியமிக்கக் கோரும் மனு உள்ளிட்டவையும், 20ம் தேதி விசாரிக்கப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளிடையே பிளவு?
வேளாண் சட்டங்களை எதிர்த்து, 400க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 'சம்யுக்த் கிசான் மோர்ச்சா' என்ற பெயரில், இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிரதிநிதிகளாக, 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தான், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கூட்டமைப்பில் உள்ள, பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பைச் சேர்ந்த, குர்னாம் சிங் சவ்தானி, சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த உள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
இதற்கு, மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசியல் சார்பு இல்லாமல் போராட்டத்தை தொடர வேண்டும்' என, அவர்கள் கூறியுள்ளனர். சவ்தானியின் கருத்துக்கும் அவர்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்கங்கள் உறுதி
டிராக்டர் பேரணி நடத்த அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்க, டில்லி போலீசக்கு முழு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளதாவது:திட்டமிட்டபடி, 26ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். அமைதியான முறை யில் போராடுவதற்கு, அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பேரணி இருக்கும். மேலும், குடியரசு தின விழா நடக்கும் ராஜபாதை பகுதியில், நாங்கள் பேரணி நடத்தப்போவதில்லை.'அவுட்டர் ரிங் ரோடு' எனப்படும் வெளிவட்டச் சாலையில் தான் பேரணி நடத்த உள்ளோம். பேரணி முடிந்ததும், மீண்டும் டில்லி எல்லைக்கு திரும்புவோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE