புதுடில்லி :'சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' ஒரு தனியாருக்கு சொந்தமானது. அதன் நிபந்தனைகள் உங்களுக்கு பிடிக்காவிட்டால், அதை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், வாட்ஸ் ஆப் சமூக வலைதளம், சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, 'பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' உடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்த கொள்கையை ஏற்பதற்கான காலக்கெடுவை, பிப்., 8ல் இருந்து, மே, 15ம் தேதிக்கு, அந்த நிறுவனம் ஒத்தி வைத்தது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரித்த, உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாவது:வாட்ஸ் ஆப், ஒரு தனியார் சமூக வலைதளம். அதன் கொள்கைகளை ஏற்பது, தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு ஏற்றது. நீங்கள் அதை ஏற்காவிட்டால், அதை பயன்படுத்த வேண்டாம்; வேறு சமூக வலைதளத்தை
பயன்படுத்துங்கள்.சமூக வலைதளங்களின் நிபந்தனைகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. அதைப் படித்தால், உங்களுடைய எந்தெந்த தகவல்களை, அவர்கள் பயன்படுத்த நீங்கள் அனுமதித்துள்ளீர்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். 'கூகுள் மேப்' சமூக வலைதளமும், உங்கள் மொபைல் போன்களில் உள்ள தகவல்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது; விரிவாக இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE