மும்பை, :நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, வரலாறு காணாத வகையில், 43 லட்சத்து, 95 ஆயிரத்து,75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த, 2018, டிச.,18ல், ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். அவர் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், இதுவரை இல்லாத வகையில், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
நிதிச் சந்தை
இது குறித்து, 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ் இந்தியா'வைச் சேர்ந்த, பொருளாதார வல்லுனர்கள, இந்திரனில் சென் குப்தா, ஆஸ்தா குத்வானி ஆகியோர் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஸ்திரமாக வைத்திருக்க, சக்திகாந்த தாஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால், கடந்த, 15ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 43லட்சத்து, 95ஆயிரத்து,75 கோடி ரூபாய் என்ற அளவில், புதிய உச்சத்தை எட்டிஉள்ளது. நடப்பு நிதியாண்டில், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுக்க, ரிசர்வ் வங்கி, நிதிச் சந்தையில் 5.52 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் விட்டு உள்ளது. இது, வரும் மார்ச்சுக்குள், 6.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகம் உள்ளதால், இனி, டாலர் மதிப்பு குறையும்பட்சத்தில், அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வாங்கும்.
வாய்ப்பு
டாலர் மதிப்பு உயரும்போது, ரூபாய் வெளிமதிப்பு சரிந்தாலும், அது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.கடந்த, 15 ஆண்டுகளாக, ரூபாய் வெளிமதிப்பு ஏற்ற,இறக்கமாக இருந்தபோதுதான், அதன் ஸ்திரத்தன்மைக்காக, ரிசர்வ் வங்கி, டாலரை புழக்கத்தில் விட்டது.
ஆனால், சக்திகாந்த தாஸ், எட்டு ஆண்டுகளுக்குப் பின், போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதில், மவுனப் புரட்சியை நிகழ்த்திக் காட்டி உள்ளார். இதனால், 2011 - 2013 - 2018ம் ஆண்டுகளில், உலக நிதிச் சந்தையின் தாக்கத்தால், ரூபாய் வெளிமதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற நிலை, தற்போது இல்லை. வரும் டிசம்பருக்குள், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தற்போதைய, 73.22லிருந்து, 70.50ஆக உயர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE