சென்னை :''அ.தி.மு.க.,வில் உள்ள, சிறு சிறு அண்ணன் - தம்பி பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம். வெற்றி மட்டுமே இலக்கு,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பேசினார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெ., பேரவை மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று நடந்தது. பேரவை செயலரும், அமைச்சருமான உதயகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு, ஜெ., பேரவை தான் பிள்ளையார் சுழி போட்டு வருகிறது. யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக, அ.தி.மு.க.,வை, ஜெ., உருவாக்கி உள்ளார்.அவர் காட்டிய வழியை பின்தொடர்ந்தால், நம்மை வெல்ல யாரும் இல்லை.தமிழகத்தில், எத்தனையோ கட்சிகள் உள்ளன; அதற்கு தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பிறந்த நாளை, எப்படி கொண்டாடுகின்றனர் என, பார்க்கிறோம். ஆனால், ஜெ., பிறந்த நாளில், ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
நாம், 1,000 கொடுத்தால் தான், நம்மை பார்த்து, மற்ற கட்சிகள், ஒன்றிரண்டு கொடுக்கும். சட்டசபை தேர்தலில், அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து, வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.,வில் உள்ள, சிறு சிறு அண்ணன் - தம்பி பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம். வெற்றி மட்டுமே இலக்கு.இவ்வாறு, அவர் பேசினார்.
'மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி, டி.குன்னத்துாரில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ள கோவிலை, வரும், 30ம் தேதி, முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைக்க உள்ளனர். இதில் அனைவரும் பங்கேற்பது' என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE