தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக அணி திரட்ட, அதிரடி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. டில்லியில், நேற்று நடந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் இ.பி.எஸ்., சந்திப்புக்கு பின், இத்திட்டம் பற்றி, மற்ற கட்சிகளுடனும் பேச முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க.,- - தி.மு.க., கூட்டணிகளில், எந்த மாற்றமும் தென்படவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகளே தொடர்கின்றன.
வரவேற்பு
ஆனால், எந்த உத்தரவாதமும் அளிக்காமல், ஊசலாட்டத்தில் தான் பல கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு மற்றும் தனிப்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக, சில கட்சிகள், முடிவெடுப்பதை தள்ளிப் போட்டு வருகின்றன.
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று டில்லி சென்றார். அவருடன், அமைச்சர் ஜெயகுமார், டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் சென்றனர்.
டில்லி விமான நிலையத்தில், ராஜ்யசபா எம்.பி.,யும், துணை ஒருங்கிணைப்பாளருமான, கே.பி.முனுசாமி மற்றும் எம்.பி.,க்கள், முதல்வரை வரவேற்றனர். வரவேற்புக்கு பின், தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்வர், இரவு, 7:00 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
வலுவான கூட்டணி
அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,விற்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து, பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து கட்சிகளையும் அணி திரட்டும்படி, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தினகரன் உள்பட, அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களையும் அரவணைத்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வுக்கு எதிரான எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்' என, அமித்ஷா தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த மற்ற கட்சிகளுடன் பேசவும், பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அக்கட்சி தலைவர்களை, டில்லிக்கு அழைத்துப் பேசவும் முடிவு செய்துள்ளது.
டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர், இன்று காலை, 10:45 மணிக்கு, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளார். கீழே உள்ள விஷயங்கள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்:
* சென்னை, வண்ணாரப்பேட்டை -- விம்கோ நகர் இடையிலான, மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க, தமிழகம் வரும்படி, பிரதமருக்கு அழைப்பு
* காவிரி- - குண்டாறு இணைப்பு திட்டத்தை, உடனடியாக துவக்க வேண்டும்; அதற்கு நிதியுதவி வழங்க வேண்டும்
* தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும்
* ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள்
இறுதி வடிவம்
அதோடு, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், பிரதமரிடம் முதல்வர் பேசுவார் என தெரிகிறது. பிரதமரை சந்தித்த பின், இன்று இரவு, முதல்வர் சென்னை திரும்புகிறார்.
அதற்கு முன், சில மத்திய அமைச்சர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வியூகத்திற்கு, முதல்வரின் டில்லி பயணத்தில், இறுதி வடிவம் கொடுக்கப்படும் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE