மதுரை : மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த, வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை, அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.அப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு உத்தரவு:மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அரசியல், மத ரீதியான அடையாளங்களுடன், அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE