புதுடில்லி : 'வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவை, பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன.

அங்குள்ள சில சட்டப் பிரச்னைகளால், அது தாமதமாகிறது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், 9,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.கடந்த, 2016ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை, நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டது.
இது தொடர்பான வழக்கு, பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மல்லையாவை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கை, நீதிபதிகள், யு.யு. லலித், அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணை யின்போது, மத்திய அரசின் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:மல்லையாவை நாடு கடத்தி வருவது தொடர்பாக, பிரிட்டனுடன், நம் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது. மத்திய அரசு, அனைத்து வழிகளிலும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமீபத்தில், பிரிட்டன் அரசின் சார்பில், நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 'பிரிட்டன் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவை முடிவு அடைந்த பிறகே, மல்லையாவை நாடு கடத்த முடியும். அதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை, மார்ச், 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE