கீழச்சிவல்பட்டி: ''எங்கள்கூட்டணிக் கட்சியான தி.மு.க.,தமிழ் புத்தாண்டை மாற்றுவோம் என கூறுவதை ஏற்க முடியாது. பகுத்தறிவு பேசுவோர் மனு தாக்கல், விசேஷங்கள் நடத்தும் முகூர்த்த நாட்கள் ரோமானிய காலண்டரிலா உள்ளன, நமது பஞ்சாங்கத்தில்தானே உள்ளன' என்று சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திகூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் தமிழர் மன்றம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: நம்பிக்கை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். அடுத்தவர் நம்பிக்கையை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. இன்றைய அரசியல் சூழலில் மாற்றுக் கருத்துக் கூறினால் கொச்சைப்படுத்துவதும், கேவலமாக விமர்சிப்பதும், ஏன்தேச துரோகி என்றும்கூட கூறி விடுகிறார்கள்.
எனக்கு கடவுள் நம்பிக்கை, பழக்க வழக்கங்களில் நாட்டம் உண்டு. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க., தை ஒன்றை தமிழ் புத்தாண்டு என்கிறது. அதை நான் ஏற்க முடியாது.கூட்டணிக் கட்சி கூறும் அனைத்துக் கருத்துக்களையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆங்கில புத்தாண்டு எப்போது
ஜனவரி முதல் தேதி ஆங்கிலப்புத்தாண்டே கிடையாது. அது ரோமானிய ஆண்டு தான். கிறிஸ்து பிறப்பதற்கு 50 ஆண்டுக்கு முன் ஜூலியஸ் சீஸர் உருவாக்கிய காலண்டர். ரோமானியக் கடவுள் பெயரில் தான் ஜனவரி மாதம் உள்ளது. வான சாஸ்திரப்படி, லத்தீன் காலண்டர் அடிப்படையில் ஏப்ரலில் தான் அவர்களின் புத்தாண்டு. பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் தேதிக்கும் லத்தீன் காலண்டருக்கும் 14 நாட்கள் தான் வேறுபாடு.சூரியன் நகர்வின்படி, அறிவியல்படி சித்திரை ஒன்று தான் நமக்கு புது வருடம். எனக்கு தெரிந்த இந்த விளக்கத்தை அளித்ததற்கு தான் 'எனக்கு பகுத்தறிவு கிடையாது, கூட்டணிக்கு துரோகம் செய்கிறேன், திராவிடக் கலாசாரத்திற்கு விரோதமானவன்....'.என்று விமர்சனம் செய்கிறார்கள்.
முகூர்த்த நாட்கள்
பல அரசியல் கட்சி நண்பர்களின் விசேஷங்களுக்கு சென்றுள்ளேன். எல்லோரும் நமது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நல்ல நாள், நேரம் குறித்து தான் செய்கின்றனர். கடவுள் இல்லை, பகுத்தறிவு என்பவர்கள் முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில் தானே தேர்தலுக்கு மனுச் செய்கின்றனர்.நம்பிக்கையிருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லா மதத்தையும் ஏற்பது தான்மதச்சார்பின்மை.மாற்றுக் கருத்து கூற சுதந்திரம் கிடையாதா. என்னுடைய நம்பிக்கையை கூறுகிறேன். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை. இவை பற்றி விவாதிக்க நான் தயார், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE