பஞ்சாயத்தில் ஒரு 'பஞ்சாயத்து' :ஆளுங்கட்சியில் அட்டகாசமாக நடக்குது உள்குத்து

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021
Advertisement
அவிநாசிக்கு அருகிலுள்ள ராயம்பாளையத்தில் நடந்த காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்கே, சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர்.''எப்படியோ மித்து. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சு, ஊசி போட ஆரம்பிச்சுட்டாங்க. இனி, நிம்மதியா இருக்கலாம் போல'' என, வண்டியை ஸ்டார்ட் செய்தவாறே சொன்னாள் சித்ரா.''ஆமாங்க்கா... ஆனா, முன் களப்பணியாளரில் பலர் தடுப்பூசி போட்டுக்க
பஞ்சாயத்தில் ஒரு 'பஞ்சாயத்து' :ஆளுங்கட்சியில் அட்டகாசமாக  நடக்குது உள்குத்து

அவிநாசிக்கு அருகிலுள்ள ராயம்பாளையத்தில் நடந்த காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்கே, சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர்.

''எப்படியோ மித்து. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சு, ஊசி போட ஆரம்பிச்சுட்டாங்க. இனி, நிம்மதியா இருக்கலாம் போல'' என, வண்டியை ஸ்டார்ட் செய்தவாறே சொன்னாள் சித்ரா.

''ஆமாங்க்கா... ஆனா, முன் களப்பணியாளரில் பலர் தடுப்பூசி போட்டுக்க வரலையாம்,''

''அப்படியா...?''

''அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில தடுப்பூசி போட்டாங்க. ஐ.எம்.ஏ.,வை சேர்ந்த டாக்டர்ங்க கூட்டம் கூட்டமா வந்து, தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க. ஆனா, நர்சுங்க மட்டும், வரவே இல்லை. எனக்கு தைராய்டு, சுகர் இருக்குன்னு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பின் வாங்கிட்டாங்களாம். என்னம்மா… நீங்களே இப்படி பயப்படறீங்களேம்மான்னு, டாக்டர்ங்க புலம்பியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''இதே மாதிரி தான், அவிநாசி அரசு மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போடறதா தகவல் வந்துச்சு. அதனால, டாக்டர்ங்க தயாரா இருந்தாங்க. ஆனா, 'தடுப்பூசி டியூட்டி இல்லைன்னு', மெசேஜ் வந்தது. காரணம் தெரியாம குழம்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''சரி, அதுக்கும் ஏதாவது பதில் வச்சிருப்பாங்க,'' என்ற மித்ரா, ''காங்கயத்துல நடந்த கமல் பிரசார கூட்டத்தை கவர் செய்ய வந்த தனியார் 'டிவி' நிருபர்கிட்ட இருந்து, 10 ஆயிரம் ரூபாயை சுட்டுட்டாங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அடக்கொடுமையே...''

''கூட்டம் நடந்த இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைச்சு, திருட்டு நபரை பிடிக்கலாம்ன்னு நிருபர் கேட்ட போது, அங்க இருக்க கேமரா மழையில் நனைஞ்சு, ரிப்பேர் ஆகிடுச்சுன்னு, போலீஸ்காரங்க கூலா சொல்லியிருக்காங்க. இதைக்கேட்ட நிருபர் அதிர்ச்சி அடைஞ்சிட்டாராம்,''வழியில் ஒரு சிறிய ஓடை குறுக்கிட்டது. அதைக்கடந்து இருவரும், கிராமத்துக்குள் நுழைந்தனர்.

''இங்க பாருடி. குளத்துக்கு தண்ணி போற ஓடை எப்படி புதர்மண்டி கிடக்குதுனு,''

''ஆமாங்க்கா, ரொம்ப மோசம்தான். நீர் வழித்தட ஆக்கிரமிப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்ன்னு கோர்ட்டு உத்தரவு போட்டுருக்கு. ஆனா, கே.வி.ஆர்., நகர் பக்கத்தில இருக்கற ஜம்மனை ஓடைக்கு செல்லும் கிளை ஓடையை மறித்து, சூரிய கட்சி பிரமுகர் ஒருத்தர் ஆக்கிரமிப்பு செய்திருக்கார். ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள, கார்ப்ரேஷன் அதிகாரிங்க நோட்டீஸ் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லையாம்,'' என்றாள் மித்ரா.

அப்போது, 'கிருஷ்ணமூர்த்தி' பேக்கர்ஸ் என பெயரிட்ட கடை முன் வண்டியை நிறுத்திய சித்ரா, ''மித்து, போய் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வா...'' என்றதும், அவள் சென்றாள்.ஓரிரு நிமிடங்களில் மித்ரா வந்ததும், இருவரும் புறப்பட்டனர்.

''போலி நிலத்தை விக்கிற விவகாரத்துல வில்லங்கம் வந்துடுச்சாம்,'' புதிர் போட்டாள் சித்ரா.

''என்ன விஷயங்க்கா...?''

''நெருப்பெரிச்சல் கிராமத்தில, இன்னொருத்தரோட நில பட்டாவில், வடக்கு வி.ஐ.பி., பிரதர்ஸ், தங்கள் பெயர சேர்த்துக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாம, அந்த இடத்தை விக்கவும் முயற்சி பண்றாங்க...''

''இத தெரிஞ்சுகிட்டு, உண்மையான நில உரிமையாளர்கள், இடத்தை வாங்குபவரிடம் போய், 'லேண்ட் டாக்குமென்ட்டை' காண்பிச்சு, வி.ஐ.பி., பிரதர்ஸ் செய்த தில்லுமுல்லு வேலைகளையும் புட்டுப்புட்டு வச்சிட்டாங்க. உடனே, இடம் வாங்க நெனச்சவங்க, மின்னல் வேகத்தில திரும்பி போய்ட்டாங்களாம்,''

''இப்படித்தான், முக்கியமான ஆட்கள் பல வேல பண்றாங்க. ஆனா, அதிகாரிகள், கண்டுக்கறதே இல்லையே,''

''ஆமான்டி, அவங்க நல்லா கண்டுக்குவாங்க,'' என்ற சித்ரா, பெண்கள் கும்மியடித்து கொண்டிருந்த பகுதியில், வண்டியை பார்க்கிங் செய்தாள்.இருவரையும் பார்த்த, அவர்களின் தோழியர் வரவேற்று, பொங்கல் வாழ்த்து பரிமாறினர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிகழ்ச்சி முடிந்தபின், புறப்பட்டனர்.

வழியில், ஆளுங்கட்சி நிர்வாகியின் பொங்கல் வாழ்த்து பேனர் கண்ணில் படவே, ''மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வுல, கோஷ்டிகானம் பாடறவங்களுக்கு, பதவி கொடுக்க வசதியா, புதிய 'பகுதி'களை உருவாக்கியிருக்காங்க,''

''அதாவது, 10 வார்டுக்கு ஒரு பகுதின்னு இருந்ததை, ஆறு வார்டுக்கு ஒரு பகுதின்னு மாத்தியிருக்காங்க. குறிப்பாக, 'சவுத்' ஆட்கள் அதிகமான பதவிகளை வாங்கிட்டாங்களாம்,''

''இதனால, பல்லடம் வி.ஐ.பி., மாநகராட்சி பகுதியிலுள்ள வீரபாண்டி வார்டில், தன்னோட மகளை நிறுத்தி, மண்டலத்துக்கே தலைவர் ஆக்க இப்பவே களம் இறங்கிட்டாராம்,'' விளக்கினாள் சித்ரா.

''ஆளுங்கட்சியை பொருத்தவரை, என்னதான் விசுவாசமா இருந்தாலும், எம்.எல்.ஏ.,க்கள் கைகாட்டின ஆட்களுக்குத்தான் கட்சி பதவி கிடைக்குதுனு ஒரு வருத்தம், தொண்டர்கள் மத்தியில இருக்கத்தான் செய்யுது'' என்றாள் மித்ரா.

'உடுமலை வி.ஐ.பி.,யின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்குதாம். ஆரம்பத்துல இருந்து, கட்சிக்காக கஷ்டப்படறவங்கள ஓரங்கட்டியே வைச்சு இருக்காராம். இதனால வர்ற எலக்ஷனில், அவருக்கு உள்ளடி வேலை பாக்க பலரும் ரெடியா இருக்காங்களாம்.

''உடனே சித்ரா, ''அதேபோல, திருப்பூர்ல சூரிய கட்சியின் செயல்பாடுகளை 'ஐபேக்' நிறுவனம் 'வாட்ச்' பண்ணி தலைமைக்கு தகவல் கொடுத்துட்டு வர்றாங்க. கோஷ்டி அரசியல் அதிமாக இருக்கறதாவும், பொறுப்புல இருக்கவங்க, தங்களோட செல்வாக்க மட்டும் தக்க வைச்சுக்க காய் நகர்த்திட்டு வர்றதையும், தெளிவா தலைமையின் கவனத்துக்கு கொண்டு போய் சேர்த்திருக்காங்க,''

''இந்த கோஷ்டி பூசலால், மண்ணை கவ்வற நிலை கூட வந்துடும்னு, அலர்ட் மெசேஜ் போட்டுட்டாங்களாம்,''

''அக்கா... என்னதான், அலர்ட் பண்ணாலும், கோஷ்டி கானம் பாடறதை மட்டும் நிறுத்த மாட்டாங்க்கா,'' சிரித்தாள் மித்ரா.

வழியோரத்தில் பான்பராக், குட்கா பாக்கெட்டுகள் சிதறி கிடப்பதை கண்ட மித்ரா,''வில்லேஜ் பக்கம், பான்பராக், குட்கா தாராளமா கிடைக்குதாம்,'' என்றாள்.

''உண்மைதான்டி. ஒரு பேக்கரியில் பறிமுதல் பண்ண குட்காவை, அதே கடையில கொண்டு போய் ஒப்படைச்ச கதை தெரியுமா,'' புதிர்போட்டாள் சித்ரா.

''இது, எங்கக்கா?''

''சிட்டி சென்ட்ரல் ஸ்டேஷன் போலீஸ்காரங்க, சமீபத்தில் ஒரு பேக்கரிக்கு 'ரெய்டு' போனாங்க. திருட்டுத்தனமா வித்துக்கிட்டு இருந்த குட்கா பொட்டலங்களை பறிமுதல் செஞ்சு, கடை ஓனரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க,''

''அப்புறம் ஜாமினில் வெளியே விட்டதோடு, பலமான 'கவனிப்பு' வாங்கிட்டு, பறிமுதல் பண்ண குட்கா அயிட்டங்களை அவர்கிட்டயே திருப்பி கொடுத்திட்டாங்க. அதோடில்லாம, மாசாமாசம் 'சந்தா' வசூலிக்க, பேக்கரிக்காரர் நம்பரையும் மறக்காம வாங்கி, நோட் பண்ணி வச்சிட்டாங்களாம்,''

''இப்படித்தாங்க்கா, சேவக்கட்டு விஷயத்திலும் நல்லா காசு பாக்கறாங்க. குண்டடத்தில், சமீபத்தில் பெரியளவில் சேவல் சண்டை நடந்திருக்கு. விஷயம் தெரிஞ்சு, சம்பந்தப்பட்ட இடத்துக்கு போன போலீஸ்காரங்க, சேவல், மொபட், பைக், பணத்தை பறிமுதல் பண்ணி இருக்காங்க. ஆனா, கணக்கு கம்மியா காமிச்சு, அமவுன்ட்டை பங்கு போட்டுகிட்டாங்களாம்,'' என்றாள்.

''ஏன்டி, மித்து. பல விஷயங்களில், குண்டடம் போலீஸ்காரங்க இப்படித்தான் பண்றாங்க. எஸ்.பி., மேடம் ஏன், கண்டுக்கலைன்னு தெரியலயே,''

''இல்லக்கா... தெரிஞ்சிருந்தா கண்டிப்பாக ஏக் ஷன் எடுத்திருப்பாங்க. அவங்களுக்கு தெரியாம பண்ணிட்டாங்க போல,''

''மே...பி!'' என்ற சித்ரா, ''ஆண்டிபாளையத்துல, ஒரு கம்ப்யூட்டர் சென்டர்க்காரர், ரெவின்யூ ஆபீசரோட கைகோர்த்துட்டு, வாக்காளர் அடையாள அட்டை வாங்கித்தர்றதா சொல்லி, 300 ரூபாய் கலெக்ஷன் பண்ணிடறாராம்,'' என்றாள்.

''அங்க மட்டுமில்லீங்க்கா, அவிநாசி, பல்லடத்திலயும், தாலுகா ஆபீசுக்கு பக்கத்தில, இ-சேவை மையம்னு போர்டு வெச்சுட்டு, வசூலில் பட்டைய கெளப்புறாங்க. இதுக்கு, ரெவின்யூ ஆபீசர்களும் பயங்கர சப்போர்ட்டாம்,''

''வேலியே பயிரை மேயறதுன்னு சொல்றது இவங்களைத்தானா...?'' சொன்ன சித்ரா,

''கொரோனாவுக்கு அப்புறமா ரியல் எஸ்டேட் பிஸினஸ் தொழில் பட்டைய கிளப்புதாம்,'' என்றாள்.

''ஆமாங்க்கா… நானும் கேள்விப்பட்டேன். குறிப்பா, பல்லடத்துல ரொம்ப அதிகம்ன்னு கேள்விப்பட்டேன். ஒரு பஞ்சாயத்து தலைவர், ரியல் எஸ்டேட்டுக்காக ஒரு இடத்த வளைச்சு போட்டிருக்காரு. பஞ்சாயத்துல எங்க திரும்பினாலும் ரியல் எஸ்டேட்தான் கண்ணுக்கு தெரியுது,''

''இதுக்கு முக்கிய காரணமே, கிராம அதிகாரி தானாம். அவரும் 'பார்ட்னர்ஷிப்' போட்டுள்ளதால், எல்லா வேலையும் ஈஸியா முடியுதாம். எப்படியும் ஒரு நாளைக்கு பஞ்சாயத்து வரும் பாருங்க...'' என மித்ரா சொல்லவும், அவள் வீடு வரவும் சரியாக இருந்தது.

''ஓ.கே., மித்து, பை... பை...'' என்று சொன்ன சித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''யாரு பகவதி ஆன்ட்டியா? நாளைக்கு சாயங்கலாம் கரடிவாவிக்கு வந்துடறேன். நீங்களும் வந்துடுங்க...'' என பேசி, இணைப்பை துண்டித்து, புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X