மும்பை : 'நெறிமுறைகளை பின்பற்றி, சரியான செய்திகளை வெளியிடாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கையை ஊடகங்கள் எதிர்கொள்ள நேரிடும்' என, மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையில், கடந்த ஆண்டு, பிரபல நடிகர் சுஷாந்த் சிங், துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப் பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த மரணம் தொடர்பாக, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் சில உத்தரவு களை, உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:குற்ற வழக்குகளில், ஊடகங்கள் வெளியிடும் சில செய்திகள், அது தொடர்பான விசாரணையில் தலையிடுவதுபோல் இருக்கின்றன. சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின், 'ரிபப்ளிக் டிவி' மற்றும் 'டைம்ஸ் நவ்' செய்தி சேனல்களில், அதுகுறித்து வெளியிடப்பட்ட சில செய்திகள் மோசமாக இருந்தன. அத்தகைய செய்திகளை வெளியிடுவது, சட்டவிதிகளுக்கு புறம்பானது.பத்திரிகை நெறிமுறைகளை பின்பற்றி, ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE