உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வை, ஹிந்து விரோதி என்கின்றனர். ஆனால், என் மனைவி செல்லாத கோவில் இல்லை; தி.மு.க.,வினர் செல்லாத கோவில்கள் இல்லை. பக்தி என்பது தனிப்பட்ட விஷயம்' என, அக்கட்சியின்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கடைப்பிடிக்கும் தி.மு.க.,விற்கு எதிராக, சமீபகாலமாக மக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். இது, வரும்தேர்தலில், தி.மு.க.,விற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுஉள்ளது. அதன் விளைவே, மேற்கண்ட பேச்சு.

மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் தன் மனைவியை, தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் போகிறாரா ஸ்டாலின்? ஏனெனில், ஸ்டாலின் ஹிந்து விரோத போக்கை கடைப்பிடிப்பவர். அவர் முதல்வராவது, ஹிந்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 'பக்தி என்பது தனிப்பட்ட விஷயம்' என்கிறாரே... அப்புறம் எதற்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையில் அத்துமீறி, தன் மூக்கை நுழைக்கிறார்? ஸ்டாலின் மட்டுமல்ல... கருணாநிதி, கனிமொழி, தற்போது தி.மு.க., இளைஞரணி தலைவராகியிருக்கும் உதயநிதி உட்பட குடும்பமே, ஹிந்து வெறுப்புணர்ச்சியுடன் தான் இருக்கின்றனர். இவர்கள், ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை கூட விரும்புவதில்லை. அதனால், எந்த சிறப்பும் கிடைத்துவிடப் போவதில்லை என்றாலும், வாழ்த்து தெரிவிக்கும் சாதாரண ஒரு மரபைக் கூட கடைப்பிடிக்க விரும்புவதில்லை.

அசாத்திய ஹிந்து வெறுப்பு மனநிலையில் இருக்கும் இவர்கள், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பண்டிகை அனைத்துக்கும், தவறாது வாழ்த்து தெரிவிப்பர் என்பதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களது பகுத்தறிவு, மதச்சார்பின்மை என்பதெல்லாம், ஹிந்து விரோதம் மட்டும் தான். தி.மு.க.,வை ஹிந்து விரோதி என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்க முடியும்? தி.மு.க., ஆட்சிக்கு வருமேயானால், அக்ட்சியின் செயல்பாடு, ஹிந்துக்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். மத மாற்றம், மதக் கலவரமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். வரும் தேர்தலின்போது, ஹிந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டு அளிக்க, ஒட்டுமொத்தமாக திரள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE