சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து செய்யப்பட இருப்பதாக அரசியல் கட்சியினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவை பயிர் கடன் தங்க நகை அடமான கடன் மகளிர் சுய உதவி குழு கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன. அவற்றில் மற்ற வங்கிகள் நிதி நிறுவனங்களை விட நகை கடனுக்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்குகின்றனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகை கடன்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக கட்சிகள் வதந்தி பரப்பி வருகின்றன.

கூட்டுறவு வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான 'நபார்டு' மற்றும் பொது மக்களிடம் இருந்து திரட்டப்படும் 'டிபாசிட்' ஆகியவற்றை நிதி ஆதராமாக கொண்டு கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. தங்க நகைகளை அடமானம் வைத்து ஓராண்டாகியும் மீட்காமலும் அதற்கான வட்டி அசல் தொகை செலுத்தாமலும் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு வட்டி செலுத்தி நகை கடனை புதுப்பித்து கொள்ளுமாறு சொன்னால் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நகை கடன் ரத்து செய்யப்பட இருப்பதாக கூறுகின்றனர்.
நகை கடன் ரத்து தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. சில கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன், நகை கடன் ரத்து செய்வதாக வாக்குறுதி அளிக்கின்றன. எனவே கடன் ரத்து குறித்த தவறான தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE