சென்னை உலக புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான, டாக்டர் சாந்தா, உடல்நலக் குறைவால், இன்று (ஜன.19)காலமானார்.
சென்னை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலத்தில் இருந்தும், புற்றுநோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை தலைவராக செயல்பட்டு வந்தவர், புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா, 93. இதயநோய், மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.19)அதிகாலை, 3:30 மணியளவில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
அங்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தயாநிதி எம்.பி., நடிகர் விவேக், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் பிரபல டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொது மக்கள் என, பலர் அஞ்சலி செலுத்தினர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து அவரது உடல், இன்று (ஜன.19) மாலை, 4:30 மணிக்கு, ஊர்வலமாக, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், டாக்டர்கள், நர்ஸ்கள் பங்கேற்றனர்.
மேலும், வழிநெடுவிலும், டாக்டர்கள், நர்ஸ்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மின் மயானத்தில், டாக்டர் சாந்தாவுக்கு, 72 குண்டுகள் முழங்க, காவல் துறை மரியாதையுடன், அவரது சகோதரி சுசீலா கற்பூரம் ஏற்ற, மாலை, 6:15 மணியளவில், உடல் தகனம் செய்யப்பட்டது.
வாழ்க்கை வரலாறு:
சென்னை மயிலாப்பூரில், கடந்த மார்ச் 11, 1927 ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் தான் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை துவங்கினார்.
12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவர் பெரும் பங்காற்றினார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலை.,யின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இருந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகில் புற்றுநோய்க்கு எங்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், உடனடியாக அறிமுகம் செய்வதை தனது தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE