மதுரை: ''கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் நம்மிடம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் சமம்; வேறுபாடுகளை களைந்து வாழ வேண்டும் என்ற செய்தியை உணர்த்தியுள்ளது,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜன., 4ல் பொறுப்பேற்ற சஞ்ஜிப் பானர்ஜி, நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தார். அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசியதாவது: கொரோனாவால், ஒன்பது மாதங்களில், ஒவ்வொரு துறையிலும், வேலை, கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் பணிபுரிந்த நிலை மாறி, இணையதளம் வாயிலாக பணிபுரியும் சூழல் உருவாகியுள்ளது. காணொலி மூலம் நீதிமன்ற விசாரணை நடக்கிறது.கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் நம்மிடம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் அனைவரும் சமம்; 'ஈகோ' இன்றி, வேறுபாடுகளை களைந்து வாழ வேண்டும் என்ற செய்தியை உணர்த்தியுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. வழக்குகளில் விரைவாக தீர்ப்பளிப்பதை கொள்கையாக கொண்டுள்ளேன். 450 பக்க தீர்ப்புகளைக்கூட, மூன்று அல்லது நான்கு வேலை நாட்களுக்குள் இறுதி செய்து விடுவேன். தமிழகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவேன். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE