தி.மு.க.,வை ஆட்சியில் அமர விடாமல், 10 ஆண்டுகளாக நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த கோபத்தில் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், என்னைப் பற்றி அவதுாறு பரப்பி வருகிறார். அதுபற்றி, நாங்கள் கவலைப்படவில்லை.
- அமைச்சர் வேலுமணி
'ஓ... அது தான், உங்கள் மீது, தி.மு.க., தலைவருக்கு இவ்வளவு காட்டமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேச்சு.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் முதலில் இந்த ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
- மாநில அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில்
'மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தடுப்பூசிகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சில, பிற நிறுவன தயாரிப்புகள் குறித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கேள்வி...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் அறிக்கை.
தமிழகத்தில், மனுதர்ம ஆட்சியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். அதை தடுக்க, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை கருதி, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'நீங்கள் கூறும் கட்சி, ஆட்சிக்கு வந்தால், ரவுடியிசம் தலை துாக்கிவிடும்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றல்லவா, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு.
மத்திய அரசு சார்பில், மாநிலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும், தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். இதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

'தமிழில் தேர்வு எழுதி வென்றவரை, ஒடிசாவில், மத்திய அரசு பணியில் அமர்த்தினால், மொழி தெரியாமல் அவர் சிரமப்பட மாட்டாரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
ஒரு வாரத்திற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'மழையால், பல தரப்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு கேட்பது ஓரவஞ்சனை. நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்களை மறந்து விடுகிறீர்களே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.
அமைச்சர்கள் போட்டுக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதி அளித்த உடன், கொரோனா தடுப்பூசியை நான் போட்டுக் கொள்வேன்; அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
- அமைச்சர் விஜயபாஸ்கர்
'முன்களப் பணியாளர்களுக்கு எல்லாம் முன்களத்தில் நின்று பணியாற்றிய உங்களுக்கும், தடுப்பூசி அவசியம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE