சென்னை: தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று(ஜன.,19) திறக்கப்பட்டன. இதற்காக, வகுப்பறைகள், பள்ளி வளாகம், கழிப்பறை உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய, பள்ளிகளில் தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள.

பள்ளிக்கு வரும் போது, முற்பகல் இடைவெளி, மதிய உணவு இடைவேளை, பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டுக்கு செல்லும் போது கைகளை சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட், 19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள், பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரு வகுப்புக்கு, 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களிடம், உடல்வெப்பநிலை பல்ஸ் - ஆக்சி மீட்டர் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. பெற்றோர் கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கல்வி பயில வசதிகள் ஏற்படுத்தப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இன்று முதல் வழக்கம் போல செயல்பட தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட வாரியாக குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனிடையே, பஸ்பாஸ் இல்லை என்றாலும், பள்ளி சீருடையில் வந்தாலே பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE