புதுடில்லி: சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி நேற்று விமானம் மூலம் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடியை பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.
சந்திப்பிற்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறியுள்ளார். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன்.

சசிகலாவால் மாற்றம் வருமா ?
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான நீண்ட நாள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் ரீதியாக வேறு எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது. என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் தொடர்ந்து 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.
சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை. சசிகலா விடுதலையால் கட்சிக்குள் எந்த மாற்றமும் ஏற்படாது. அவருடன் இருந்தவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்து விட்டனர். இன்னும் சிலர் மட்டும் அவருடன் உள்ளனர். சசிகலாவை கட்சியில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE