நாமக்கல்: சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாகரை ஊராட்சியில் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை, மின்சார வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அது தொடர்பாக கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும், மூத்த அமைச்சருமான தங்கமணிக்கும் அந்த நகல் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால், இதுவரை, அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை. இதில் இருந்து உண்மை என்னவென மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவும் நீட்தேர்வை ஏற்கவில்லை. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமி நீட் தேர்வை ஏற்று கொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியும் பலனில்லை.

முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பிரச்னையை தீர்க்க டில்லிக்கு செல்லவில்லை. வரும் 27 ம் தேதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் டில்லி சென்றுள்ளார். சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE