புதுடில்லி: இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி பல ஆண்டுகளாக இந்தியா -சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.இங்கு நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அவற்றை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வந்த நிலையில், அருணாசலப்பிரதேசத்தில் பல வீடுகள் அடங்கிய புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகின. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய இந்த கிராமத்தின் செயற்கை கோள் புகைப்படத்தை தனியார் டி.வி. வெளியிட்டது. இந்த செயற்கைகோள் புகைப்படத்தை பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் தற்போது உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல், இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியா பலவீனமாகி உள்ளது என்பதை சீனா பார்த்து கொண்டிருக்கிறது. உலக வரைப்படத்தை மாற்ற சீனா விரும்புகிறது. ஆனால் இந்தியாவுக்கோ உலகளாவிய பார்வை இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE