சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில், அதன் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலா குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசுகையில், "1987ல் போபர்ஸ் ஊழல் வந்தபோது, 400 இடங்களுக்கு மேல் பெரும்பான்மையுடன் இருந்த ராஜிவ் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த ராம்நாத் கோயங்கா, அருண் ஷோரி, நான் போன்றோர் முயற்சி செய்தோம். இதற்காக பல குற்றச்சாட்டுகள் உள்ள சந்திரசாமி என்பருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அப்போது, அருண் ஷோரி, ‛வீடு பற்றி எரிகிறபோது, கங்கை நீருக்கு காத்திருக்க முடியாது. சாக்கடை நீரையும் வாரி வீசுவோம்,' என்றார்.
அதுபோல தான், தி.மு.கவை விலக்குவதற்கு சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. ஒரு அணி என திரளும்போது, கங்கை நீருக்கு காத்திருக்க முடியாது. எல்லா நீரையும் ஏற்றுக்கொள்ளலாம் என தோன்றுகிறது" என குருமூர்த்தி பதிலளித்தார். இது பெரும் சர்ச்சையானாலும், சசிகலாவின் விடுதலையை சில அரசியல்வாதிகள் உற்று நோக்குகின்றனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் பரபரப்பான சூழலில் வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை ஆகவுள்ளார். அவரை மீண்டும் அரசியலில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? அது வரும் தேர்தலில் வெற்றிக்கு கைகொடுக்குமா?. ஒருபுறம் திராவிட ஆட்சியின் மரபில் இருந்து அதிமுக அரசு மெதுவாக மீண்டு வருகிறது. மறுபுறம், ஜெயலலிதா இல்லாததால் அக்கட்சி புதிய தலைமையை தேடுகிறது. தற்போதைய முதல்வராக உள்ள பழனிசாமி, கட்சிக்குள்ளும், மாநிலத்திலும் தனது நிலைப்பாட்டை நன்கு உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், அதிமுக தனது இழந்த ஓட்டுவங்கியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.
நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவக்குவதில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்ததில், அரசு உண்மையிலேயே ஏமாற்றம் அடைந்துள்ளது. அவரது ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியின் அரசியல் விலகல் அரசுக்கு ஏமாற்றமாக தான் இருக்கும். தற்போது மக்கள் தேடுவதெல்லாம் புத்தம் புதிய அரசியல் சூழலையும், தேர்தலையும் தான். 1996ல் நடந்த தேர்தலில் அரசின் செயல்பாடுகளை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை தலைவர்கள் மறந்துவிடாமல் இருப்பது நல்லது. அந்த காலக்கட்டத்தில் துக்ளக் ஆசிரியர் சோ மற்றும் ரஜினியின் அறிக்கைகளை நாம் மறந்து விடக்கூடாது.
கூட்டணியானது, வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும், ஊழல் குறைந்த நிர்வாகம் மற்றும் மக்களை மையப்படுத்திய நிர்வாகமாகவும் இருக்க வேண்டும். தற்போதைய அரசை அனைவராலும் எளிதில் அணுக முடிகிறது. பழனிசாமி, தனது நிர்வாக திறனை எளிதில் நிருபித்துள்ளதுடன், சிக்கலான நேரங்களிலும் தனது ஆளுமை திறனை நிரூபித்துள்ளார். முதல்வரை பொது மக்களும் அதிகாரிகளும் எளிதில் அணுக முடிகிறது.
அதிகாரிகள் சுதந்தரமாக பணியாற்ற முடிவதுடன், அதிகாரம் பெற்றுள்ளதாக கருதுகின்றனர். ஊழல் இல்லா அரசாக மத்திய அரசும் சான்றளித்துள்ளது. தற்போதைய கூட்டணியானது, இதனை மேலும் ஊக்குவிக்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக இருந்த அதிருப்தி பெருமளவில் குறைந்துள்ளது. கடைசியாக முக்கியமான ஒரு விஷயம், பழைய முகங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆளும் கூட்டணியானது, தனக்கு கிடைத்துள்ள சாதக சூழ்நிலையை , விட்டுத்தர வேண்டியதற்கு எந்த காரணமும் இல்லை. வரும் தேர்தலில், திமுகவை தோற்கடித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணினால், கூட்டணியின் திறமை குறித்து சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பிவிடக்கூடாது.
பழைய அதிமுகவானது, புதிய அதிமுகவிற்கு வழிவிட வேண்டும். பழைய திமுகவானது, புதிய திமுகவிற்கு வழிவிட வேண்டும். ஆனால், மீண்டும் குடும்பத்திற்கு வழிவிடக்கூடாது. முதல்வர் பழனிசாமி, பழைய அதிமுகவிற்கு பதில், புதிய அதிமுகவை கட்டமைப்பதில் வழிகாட்ட வேண்டும். அதிமுக, தனது நிலையை ஏற்கனவே பலப்படுத்திய நிலையில், பாஜ., தனது பலத்தை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மோடி அலை வீச தயாராக உள்ள நிலையில், அவரது பெயரையும், புகழையும் பலப்படுத்துவதில் பா.ஜ., தீவிரமாக பணியாற்ற வேண்டும். இதற்கு மோடி ஒரு சில முறை தமிழகம் வர வேண்டும்.மகாபாரத போரில், படைகளின் எண்ணிக்கை மற்றும் சிறிய மன்னர்களின் கூட்டணியை நம்பி போரில், களமிறங்கிய கவுரவர்களை பின்பற்றாமல், தலைமை மற்றும் தந்திரோபாயங்களை பின்பற்றிய பாண்டவர்களின் திட்டங்களை பா.ஜ., பின்பற்ற வேண்டும். எண்ணிக்கைகளை விட, தலைமை திறன் தான் எப்போதும் வெற்றி பெறும்
பல ஆண்டுகளாக சலுகை மற்றும் இலவசங்களில் தமிழகம் மூழ்கி கிடக்கிறது. தற்போது, தமிழர்கள் விழித்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்களுக்கு எதிர்கால பார்வை காட்டப்பட வேண்டும். தற்போது, தமிழகத்தின் தேவை, தூக்கத்தில் இருந்து விடுபடுவது தான். பொய் பிரசாரம் அல்ல. குறுகிய கால பலன்களானது, நீண்ட கால பலன்களை பாதிக்கக்கூடாது. உண்மையான தலைவர்களே தமிழர்களுக்கு தேவை.

- பேராசிரியர் ரமேஷ்
ஐஐஎம் பொது கொள்கை மையம்
பெங்களூரு
இமெயில்: rameshg@iimb.ac.in
மொபைல்: +919742221338
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE