புதுடில்லி :'இந்தியர்களின் தகவல் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதால், பயனாளர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை திரும்பப் பெற வேண்டும்' என, 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தள நிறுவனத்துக்கு மத்திய அரசு, கண்டிப்புடன் கடிதம் எழுதியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'வாட்ஸ் ஆப்' செயலி, உலகெங்கும் பிரபலமானது. உலகெங்கும், 200 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் மட்டும், 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.'பிரைவசி' எனப்படும், பயனாளிகளின் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்வதாக, அந்த நிறுவனம் அறிவித்தது. வரும், பிப்., 8ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால், தன் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும் எச்சரித்திருந்தது.
அதன் புதிய கொள்கையின்படி, பயனாளிகள் தொடர்பான தகவல்களை, தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலை தளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர், மாற்று செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.இதையடுத்து, புதிய கொள்கையை செயல்படுத்துவதை, மே, 15 வரை ஒத்திவைப்பதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்திருந்தது.இ
ந்த சூழ்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில் காத்கார்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் ஆப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், அந்த செயலியின் மிகப் பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது. இந்நிலையில், பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்வதாக தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்வதற்கும், புதிய கொள்கையை நிராகரிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை.தகவல் சுதந்திரம், விருப்பமானதை தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் தகவல் பாதுகாப்புக்கு எதிராக இந்த புதிய கொள்கை உள்ளது. உலகில் அதிக அளவில் பயன்படுத்தும், இந்திய மக்களை மதிக்க வேண்டும்.
வாட்ஸ் ஆப் நிறுவனம், தன் கொள்கையில் எந்த வகையிலும் தன்னிச்சையாக மாற்றம் செய்வது நியாயமானதல்ல; ஏற்கதக்கதல்ல.இந்த புதிய கொள்கை, இந்திய மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பு எதிராக உள்ளதால், புதிய கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல் தர உத்தரவு
'வாட்ஸ் ஆப்' நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பல்வேறு தகவல்களை அளிக்கும்படி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
* இந்தியாவில் என்னென்ன சேவைகள் அளிக்கப்படுகின்றன
* எந்த வகையான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன
* பயனாளிகளிடம் இருந்து என்னென்ன அனுமதிகள் கோரப்பட்டுள்ளன
* பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப, பயனாளிகள் தரம் பிரிக்கப்படுகின்றனரா
* மற்ற நாடுகளில் பின்பற்றும் கொள்கை மற்றும் இந்தியாவில் பின்பற்றும் கொள்கைகளுக்கு உள்ள வேறுபாடு என்ன
* வேறு செயலிகளுக்கு அல்லது சமூக வலை தளங்களுக்கு தகவல்கள் பரிமாறப்படுகிறதா
* வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவோர் மொபைல் போனில் உள்ள மற்ற செயலிகள் குறித்த தகவல் சேகரிக்கப்படுகிறதா
* செயலி குறித்த முழு தொழில்நுட்ப வடிவமைப்பு, தகவல் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.இதுபோன்ற தகவல்களை அளிக்கும்படி, மத்திய அரசு கேட்டுள்ளது.
உறுதியாக உள்ளோம்!
'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உட்பட எந்த நாட்டைச் சேர்ந்த சமூக வலைத்தளங்கள், செயலியாக இருந்தாலும் இந்திய மக்களின், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், தனிநபர் சுதந்திரத்தை பறிக்காத வகையில் செயல்பட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, மக்களின் தகவல் பாதுகாப்பு எதிராக இருந்ததால், சமீபத்தில், சீனாவைச் சேர்ந்த பல செயலிகளுக்கு தடை விதித்துள்ளோம். இந்த விஷயத்தில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.
ரவிசங்கர் பிரசாத்,
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்,
பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE