ஐதராபாத் : காய்ச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப் பால் வழங்குவோர், ரத்த போக்கு கோளாறுகள் உள்ளவர்கள், தடுப்பூசி போடுவதை தவிர்க்கும்படி, அதைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
தெலுங்கானாவின் ஐதராபாதில் உள்ள, பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளன.
இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம், வினியோகித்து வருகிறது.இந்த இரண்டு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க மத்திய அரசு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, 16 முதல், தடுப்பூசி வழங்கும் பணிகள் துவங்கின.முதல்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் வரை, 3.81 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில், 580 பேருக்கு, லேசான ஒவ்வாமைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், 'கோவாக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகளின் சாதக, பாதகங்கள் குறித்து, 'பாரத் பயோடெக் மற்றும் சீரம் இந்தியா' நிறுவனம், உண்மை தெரிவிக்கும் அறிக்கையை நேற்று வெளியிட்டன.
அதன் விபரம்:
சில குறிப்பிட்ட வகை மருந்துகள் மீது ஒவ்வாமை உள்ளவர்கள், கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள், ரத்த போக்கு கோளாறுகள், 'பிளட் தின்னர்' எனப்படும், ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப் பால் வழங்குவோர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்க்கவும். ஏற்கனவே தீவிர மருத்துவ கோளாறுகள் இருந்தாலோ அல்லது வேறு தடுப்பூசிகளை சமீபத்தில் செலுத்திக் கொண்டிருந்தாலோ, அதுபற்றி, மையத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரியிடமோ, தடுப்பூசி செலுத்தும் ஊழியரிடமோ, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இதற்கு முன், குறிப்பிட்ட மருந்துகள், உணவு வகைகளை உட்கொண்ட போது அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது, கடும் ஒவ்வாமை ஏற்பட்டு இருந்தால், அது பற்றியும் தடுப்பூசி மைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.அதே போல, தடுப்பூசியின் முதல், 'டோஸ்' செலுத்திக் கொண்ட பின், கடுமையான ஒவ்வாமை ஏற்படுபவர்கள், இரண்டாவது டோசை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேலும், 45 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதில், எட்டு லட்சம் டோஸ்கள், நட்பு நாடுகளான, மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு, இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த, 45 லட்சம் டோஸ்களுக்கான கொள்முதல் கடிதத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கியவுடன், மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே, 55 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை, மத்திய அரசு வாங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE