சென்னை தமிழகத்தில், 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, 2020 டிச., 2ல், கல்லுாரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, நேற்று முதல், பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. 10 மாதங்களாக, வீடுகளில் முடங்கிய மாணவ -மாணவியர் ஆர்வத்துடன், காலை, 9:00 மணிக்கே, தங்கள் பெற்றோருடன், பள்ளிக்கு வந்தனர்.
அனைத்து மாணவ- மாணவியரும், முக கவசம் அணிந்துள்ளனரா என பார்க்கப்பட்டு, பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் வெப்ப நிலையும், தானியங்கி கருவிகள் வாயிலாக பரிசோதிக்கப்பட்டன.
ஆசிரியர்களும், பணியாளர்களும், முக கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்த பின்னரே, பள்ளிக்குள் வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டதால், முதல் நாளான நேற்று காலையில், வழிபாட்டு கூட்டம் நடத்தப்பட்டது. தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள், கொரோனா விழிப்புணர்வு அம்சங்களை எடுத்துக் கூறினர்.
பல பள்ளிகளில், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசகர்கள் வாயிலாக, கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இன்று காலையிலும், கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அதன்பின், வகுப்புகள் துவங்குகின்றன.
வகுப்புக்கு 25 மாணவர்!
ஒவ்வொரு வகுப்பிலும், 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, ஒவ்வொரு வகுப்பிலும், தலா, 25 மாணவர்கள் அமரும் வகையில், இடைவெளி விட்டு, இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE