புதுடில்லி :டில்லி போலீசார் சிறப்பாக பணியாற்றுவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
டில்லியில் உள்ள போலீஸ் தலைமையகத்தில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்; இதன்பின், அவர் பேசியதாவது:
டில்லியில், கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட நாட்கள், கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நாட்கள் என, அனைத்து நேரங்களிலும், டில்லி போலீசார் திறம்பட செயலாற்றி, முன்மாதிரியாக திகழ்ந்தனர்.
![]()
|
அடுத்த ஆண்டிற்குள், போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்திறன் மேம்படவேண்டும். அதற்காக, டில்லி போலீஸ் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், ஐந்து இலக்குகள் நிர்ணயிக்கப்படவேண்டும்.
நாட்டின் தலைநகர் டில்லி என்பதால், இங்குள்ள போலீசாருக்கு, பல சவால்கள் உள்ளன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், போலி பண நோட்டுகள் பதுக்கல் போன்ற பல சவால்களை, போலீசார் எதிர்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம், வெளிநாட்டு துாதரங்கள் அமைவிடம், பிரதான அமைப்புகளின் தலைமையகங்கள், அறிவியல் மையங்கள் என, பல முக்கிய இடங்கள், டில்லி போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. எனவே, உங்களுக்கு அதிக கடமைகள் உள்ளன.
குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், டில்லி முழுதும், 15 ஆயிரம், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
டில்லி போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE