துாத்துக்குடி : துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை கமிஷனில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக, ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துாத்துக்குடியில், 2018 மே, 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் விசாரித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு, சில சமூக விரோதிகளே காரணம்' என தெரிவித்திருந்தார். இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
தன் கருத்து குறித்து, கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நடிகர் ரஜினிக்கு ஏற்கனவே கமிஷன் சம்மன் அனுப்பி இருந்தது. அவர் ஆஜராக முடியாத சூழலை தெரிவித்திருந்தார். மீண்டும் நேற்று ஆஜராகும்படி, இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. நேற்றும் ரஜினி ஆஜராகவில்லை. துாத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த விசாரணையில், ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

பின், அவர் கூறியதாவது: ரஜினி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம். அதில், தற்போது நீதிமன்ற விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால், ரஜினியும் வீடியோ மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். கேள்வித்தாள் தந்தால், அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், துாத்துக்குடி விசாரணை கமிஷனில், வீடியோ கான்பரன்ஸ் வசதியில்லை எனவும், தேவைப்பட்டால், சென்னையில் உள்ள விசாரணை கமிஷன் அலுவலகத்தில், அவரிடம் நேரடி விசாரணை மேற்கொள்கிறோம், என கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE